இயேசு கிறிஸ்து நமக்காக சாவை ருசித்து ஏற்றுக்கொண்டார்.
ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுக்குல மைந்தனாய் நமக்காக வந்து நம்முடைய பாவங்களை போக்கி நம்மை மீட்டு தமது தந்தையிடம் அழைத்து செல்ல தம்மையே ஜீவ பலியாக இந்த நாளில் ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டெடுத்த நாள். நமக்கு முன் மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்த அவரின் வாழ்க்கையை பாடமாக வைத்து நாமும் அவரின் பாதையில் நடப்போமாக. நேற்றைய தினத்தில் பாஸ்கா திருவிருந்தில் தமது சீடர்களோடு கலந்துக்கொண்டு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைபெற்று உண்ணுங்கள்: இது எனது உடல், என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்: பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில் தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்: அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சொல்கிறேன், என்றார்.
அதன்பின்னர் இயேசு தமது சீடர்களோடு கெத்சமனி என்னும் இடத்திற்கு போய் அங்கே மிகவும் துயரமும், கலக்கமும் அடையத்தொடங்கி தமது தந்தையை நோக்கி முகம் குப்புற விழுந்து வணங்கி தந்தையே முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும், ஆனாலும் என் விருப்பப்படி அல்ல உமது விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும் என்று தனது வியர்வை இரத்ததுளிகளாய் தரையில் விழும்படி மனதுருக்கத்தோடு வேண்டுதல் செய்தார். அவர் ஒருபாவமும் செய்யாத போதும் நமக்காக மரணத்தை ருசிப்பார்த்தார். அவருக்கு தண்டனை கொடுத்த பொழுது எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல் பொறுமையோடு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார். படை வீரர்கள் ஏளனம் செய்த பொழுதும் அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். பிறகு அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
அன்று ஆதாம், ஏவாள் செய்த பாவம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்ததை போக்கும் பொருட்டு இயேசு தமது உயிரை பலியாக ஒப்புக்கொடுத்தார்.நம்முடைய அக்கிரமங்களை சிலுவை
யில் சுமந்து நம்முடைய பாவங்களுக்காக தலையில் முள்முடி சூட்டப்பட்டு நம்மை மீட்கும் பொருட்டு தமது கைகளிலும், கால்களிலும் ஆணியால் அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கினார். இந்த பூமியில் வந்து பிறந்து வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் இதைச் செய்தார். சிலபேர் அதை உணராமல் ஏனோதானோ என்று தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த உலகில் வந்து பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரே பாதையும் வாழ்வும், உண்மையும் ஆக இருக்கிறார். அவராலேயன்றி பாவமன்னிப்பு இந்த மனுக்குலத்துக்கு இல்லை. இதை நன்கு அறிந்த நாம் மற்றவர்களை இந்த நாளில் அவரண்டை வழிநடத்துவோம். அதுவே நம்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது. இந்த உலகத்தில் தமது அன்பை நிலைநாட்ட விரும்பி இவ்வாறு செய்தார். அவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளும் வண்ணம் நாமும் நம்மால் முடிந்தவரை அவரின் நாமத்துக்கு மகிமை சேர்க்கும் வண்ணமாக வாழ்ந்து அவரோடு நம்முடைய பாவத்துக்கு மரித்து அவரோடு கூட ஆளுகை செய்வோம்.
ஜெபம்
அன்பே உருவான இயேசுவே நீர் எங்களுக்காக சிலுவை சுமந்து சிலுவையில் அடிக்கப்பட்டீரே, நாங்கள் அறியாமல் செய்த பாவங்களை தயவாய் மன்னித்தீரே உமக்கு கோடி நன்றிகள் செலுத்துகி
றோம். தந்தையே இவர்களுக்கு மன்னியும் என்று வேண்டுதல் செய்தவரே உமது அன்பு மகத்துவமானது. அதற்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை.எல்லாம் குப்பையாக கருத உதவிச்செய்யும்.உமது ஒருவருக்கே பிரியமாய் வாழ உதவிச் செய்யும். நீர் காட்டும் பாதையில் நடந்து உமக்கு மகிமை உண்டு பண்ண கிருபை அளித்திடும்.நாங்கள் பெற்ற சந்தோஷத்தை மற்றவர்களும் பெற்றுக்கொள்ள அவர்களையும் நீர் கிருபையாய் சந்திக்க வேண்டுமாய் உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம். துதி, கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே! ஆமென்!!அல்லேலூயா!!!