இயேசு காட்டு புதிய வாழ்வியல் நெறிமுறை
இயேசு தான் வாழ்ந்த காலத்திலே ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார். இதுவரை உலகம் கருதியவற்றிலிருந்து, அவர் கொண்டு வந்திருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருந்ததால், யூதர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக, அது கேலி செய்யப்பட்டது. அந்த புதிய வாழ்க்கை முறைதான் இயேசுவின் சாவுக்கும் காரணமாக அமைந்தது. இயேசு உயிரோடு வாழ்ந்தது வரை, அவருடைய புதிய வாழ்க்கை முறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளும், அவருடைய குணப்படுத்துகின்ற ஆற்றலை வியந்து பார்த்தவர்களும், அவருடைய போதனையை வேறுபாடாகத்தான் பார்த்தனர்.
இயேசுவின் புதிய வாழ்க்கை முறை தத்துவத்தை அவர்கள் அப்படிப் பார்த்ததற்கும், காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் வாழ்ந்த சூழல் அப்படித்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. இயேசு மகிமை என்பதை சிலுவையின் வழியாகப் பார்த்தார். மக்களோ அடுத்தவரைப் போரில் வெல்வதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும் பார்த்தனர். உயிர்விடுதலை மக்களுக்கு வாழ்வு தரும் கொடையாக, மிகப்பெரிய தியாகமாக இயேசு பார்த்தார். மக்களோ அதை கோழைத்தனமாகப் பார்த்தனர். இவ்வாறு அவர்களது எண்ணங்களும், சிந்தனைகளும் இயேசுவிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த உலகப்போக்கான சிந்தனை, பலவேளைகளில் நம்மையும் கைதிகளாக சிறையில் அடைத்துவிடுகிறது.
இயேசுவின் கோட்பாடுகள், அவரது வாழ்வியல் தத்துவத்தை, வாழ்ந்து பார்க்கிறபோதுதான், அதனுடைய மகத்துவமும், உண்மையும் நமக்கு புலப்படும். அதை வாழமுற்படுகிறபோது, நிச்சயம், இயேசுவின் வழிகாட்டுதல் நம்மோடு இருக்கும். அவருடைய தத்துவங்களை நாம் வாழ முற்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்