இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.யோவான் 11 : 35

பிரியமானவர்களே! நம்முடைய ஆண்டவர் உயிருள்ளவர். நம்மைப்போல் அவரும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இந்தநாளிலும் நம்முடைய கண்ணீரை, துயரங்களை காண்கிறவராகவே இருக்கிறார். அன்பே உருவான தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆற்றி தேற்றி சந்தோஷத்தாலும், சமானாத்தினாலும் நிரப்புகிறார்.

பெத்தானியா கிராமத்தில் வசித்த ஒரு குடும்பத்தின்மேல் இயேசு தமது அன்பை செலுத்தி வந்தார். அவர்கள் மார்த்தா அவருடைய சகோதரியான மரியா,இவர்களுடைய சகோதரன் லாசரு என்பவர்கள் மரியா இயேசுவின் மேல் அதிகப்படியான அன்பு வைத்து இருந்தார்கள். இவர்கள்தான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். தேவையான ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் இவர்களே.அதை யாரும் அவர்களிடம் இருந்து எடுக்க முடியாது.

ஒருநாள் இந்த மார்த்தா, மரியா சகோதரன் லாசரு உடல்நிலைக்குறைவால் இறந்துபோனார். அச்சமயத்தில் இயேசுவும் அந்த ஊரில் இல்லை. இச்செய்தியை கேள்விப்பட்டு இயேசு அந்த கிராமத்துக்கு வந்து மார்த்தா, மரியாவை சந்தித்து ஆறுதல் கூருகிரார். அப்பொழுது மார்த்தா ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டானே. இப்பொழுதும் நீர் கடவுளிடம் கேட்பதை அவர் உமக்கு கொடுப்பார் என்று எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்.

அப்பொழுது இயேசு உன் சகோதரன் உயிர்த்தெழுவான் என்றார். அதற்கு மார்த்தா எல்லோரும் உயிரோடு எழுந்திருக்கும் நாளில் அவனும் உயிர்த்தெழுவான் என்று எனக்குத் தெரியும் என்றார். அப்பொழுது இயேசு என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்கள், இதை நம்புகிறாயா? என்று மார்த்தாவிடம் கேட்கிறார். அதற்கு மார்த்தா ஆம் ஆண்டவரே! நீரே மெசியா!நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் என்றார்.

மார்த்தா உடனே சென்று மரியாவை அழைத்து வருகிறார். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, இயேசுவைக் கண்டதும் அவர் காலில் விழுந்து ஆண்டவரே! நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்றார். மரியா தன் சகோதரனுக்காக அழுவதையும், அவரோடு வந்த அவர்களின் உறவினர் யாவரும் அழுவதையும், இயேசு கண்டு உள்ளம் உருகி, கலங்கி அவனை எங்கே வைத்தீர்கள்? என்று கேட்டு அவர்களோடு கூட இயேசுவும் கண்ணீர் விட்டார். கண்ணீர் விட்டு அழுததோடு அல்லாமல் இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாள் ஆன லாசருவை உயிரோடு எழுப்பி அவன் சகோதரிகளிடம் ஒப்படைக்கிறார்.எத்தனை அன்பு உள்ளவர் நம் ஆண்டவர்.நமக்காக நம்மோடு அழுகிற தேவன் அவர்.

நம்முடைய விருப்பங்கள் யாவையும் பூர்த்தி செய்கிற இறைவன் அவர்.அந்த சகோதரிகளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் அவர்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றிய இயேசு நம் ஒவ்வொருவருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவார். ஏனெனில் அவரிடம் பட்சபாதம் இல்லை. அவர் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் நேசிக்கிறார். மரியா எப்படி அவரை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துக்கொண்டார்களோ! அவருக்கு நறுமணத்தைலம் பூசி தன் கூந்தலினால் இயேசுவின் பாதங்களை துடைத்தார்களோ, நாமும் அதுமாதிரி செயல்படும்பொழுது நமக்கும் அதே மாதிரி இயேசு செய்வார். அவர் ஒருவரையும் கைவிடாத கடவுள். மனிதர்கள் வேண்டுமானால் முகத்தை பார்த்து செய்வார்கள். நம் இயேசுவோ நமது நொருங்குண்ட இதயத்தை கண்டு நம்மேல் மனதுருகி, கண்ணீர்விட்டு நமது ஒவ்வொரு காரயத்தையும் பொறுப்பெடுத்து செய்துக்கொடுப்பார்.

ஜெபம்

எங்களுக்காக கண்ணீர்விட்டு அழுது எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் இயேசுவே! உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். தகப்பனே! அந்த மரியா போல நாங்களும் உமது பாதத்தில் நறுமணத்தைலம் பூசுகிறவர்களாக வாழ உதவிச் செய்யும். கள்ளம், கபடம் இல்லாத இதயத்தை தந்தருளும். உம்மைப்போல் அன்பையும், மன்னிக்கிற குணத்தையும் தந்தருளும். எங்களுக்கு கெடுதல் செய்வர்களுக்கும் நாங்கள் நன்மையே செய்ய எங்களுக்கு போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம்
எங்கள் தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.