இயேசு ஒரு போராளி
பாரம்பரிய மதவாதிகள் இயேசுவின் அதிகாரத்தையும், ஆற்றலையும் எப்போதுமே கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவர்கள் இயேசுவிடமிருந்த வல்லமையை, ஆற்றலை முழுவதுமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் அந்த வல்லமையை தீய ஆவிகளின் வல்லமையாகப் பார்த்தனர். ஒட்டுமொத்தத்தில், இயேசு தீய ஆவிகளின் பிரதிநிதி என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தனர்.
இயேசு அவர்களின் இந்த முடிவை வெகு எளிதாக முறியடிக்கிறார். பகைவர்கள் தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொள்வதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். குழப்பம் விளைவிப்பதும், மற்றவர்களுக்குள்ளாக சண்டையைத் தூண்டிவிட்டு குளிர்காய்வது தான் அவர்கள் வேலை. அனைவரும் கெட்டது செய்வார்களே ஒழிய, யாரும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். அப்படி செய்தால், அழியப்போவது தாங்கள் தான் என்பதை அவர்கள் அறியாதவர் அல்ல. பெயல்செபூல் பேய்களின் தலைவன். அவனுடைய வேலை கெடுதல் செய்வது. மற்றவர்கள் யாராவது கெடுதல் செய்தாலும், அதற்காக முதலில் மகிழ்ச்சி கொள்கிறவர் பெயல்செபூலாகத்தான் இருக்க வேண்டும். தனது வேலையை யார் செய்தாலும், அவனுக்கு மகிழ்ச்சிதான். அப்படியிருக்கிறபோது, கெடுதல் செய்கிறவர்களைத்தண்டித்து, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு ஒருநாளும், அவன் நல்லது செய்ய மாட்டான். இதைத்தான் இயேசு வெகு எளிதாக இங்கே விளக்குகிறார்.
வாழ்க்கை என்பது நன்மைக்கும், தீமைக்கும் எதிரான போராட்டம். இதை இயேசு முழுமையாக உணர்ந்து கொள்கிறார். போராட்டங்களைக் கண்டு இயேசு ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. போராட்டங்களையும், தடைகளையும் தாண்டிச்செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதை நமக்குக் கற்றுத்தருகிறார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்