”இயேசு, ‘எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை’ என்றார்” (மத்தேயு 9:16)
இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ”பாவிகள்” என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ”பாவிகளோடு” சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார்.
பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றலாகாது எனவும் இயேசு கற்பிக்கிறார். இயேசுவின் வருகையோடு புதியதொரு யுகம் பிறந்துவிட்டது. எனவே, மக்கள் தம் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிய பார்வையோடு கடவுளை அணுக வேண்டும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயேசு கொணர்ந்த புதுமை எதில் அடங்கும்? அடிப்படையில் இயேசு கடவுளை நாம் ஒரு புதிய ஒளியில் பார்க்க வழிவகுத்தார். கடவுள் மனிதரைவிட்டு அகன்று இருப்பவர் அல்ல. அவர் மனித இனத்தோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டு விட்டார். இது ஒரு புதுமையான நிலையே. மேலும், கடவுள் மனிதரை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவருடைய பார்வையில் எல்லா மனிதரும் சமமே. ஏனென்றால் உலக மனிதர் அனைவரும் அவருடைய பிள்ளைகளே. இவ்வாறு கடவுள் பற்றி ஒரு புதிய பார்வையை இயேசு நமக்கு வழங்குகிறார். புதுப் பார்வை பெற்ற நாம் புது முறையில் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் துலங்கிய மனநிலையும் அவருடைய பார்வையும் நமதாக மாறினால் நாம் புது மனிதராக வாழ்ந்திடுவோம்.
மன்றாட்டு
இறைவா, ஊறிப்போன பழைய சிந்தனையைக் கைவிட்டு, புதிய பார்வை பெற்று வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
–அருட்திரு பவுல் லியோன் வறுவேல்