இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்?
இயேசு எதற்காக திருமுழுக்குப்பெற வேண்டும்? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதில் எழுவது இயல்பு. மத்தேயு 3: 6 ல் வாசிக்கிறோம்: “மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழக்குப் பெற்றுவந்தார்கள்”. இயேசு பாவமே அறியாதவர், கடவுளின் திருமகன். அப்படிப்பட்டவர் பாவங்களிலிருந்து மனமாற்றம் பெற்றதன் அடையாளமாக திருமுழுக்கு யோவானால் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை ஏன் பெற வேண்டும்? பொதுவாக, யூத வரலாற்றிலே திருமுழுக்கு என்பது யூதர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மாறாக, வேற்று மதத்திலிருந்து யூத மதத்தைத் தழுவுகிறவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. காரணம், யூதர்கள் தங்களை கடவுள் தேர்ந்தெடுத்த மக்களினம், தூய்மையான மக்களினம் என்று கருதியதால், தங்களைப் பாவிகள் என்று ஒருபோதும் கருதியதில்லை. யோவானுடைய போதனைக்குப்பிறகு தான், தாங்களும் கடவுள் முன்னிலையில் பாவிகளாகத்தான் இருக்கிறோம், நமது வாழ்வும் மாற்றம் பெற வேண்டும் என்ற தெளிவு அவர்களின் உள்ளத்தில் ஏற்படுகிறது. யூத வரலாற்றிலே இது ஒரு புதிய அத்தியாயம்.
இத்தகையச்சூழ்நிலையில்தான் இயேசு தானும் திருமுழுக்குப்பெற ஒப்புக்கொடுக்கிறார். அதாவது ஒரு புதிய அத்தியாயத்திற்கு உயிர் கொடுக்கிறார். பழமை முடிந்து புதுமைக்கான தொடக்க நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கு. இதுவரை இருந்த போதகர்கள் அனைவருமே பாவிகளையும், ஏழைகளையும், நோயாளிகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பழித்தும், ஒதுக்கியும், தீர்ப்பிட்டும் போதித்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் வாழ்வு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்பதன் அடையாளமாக, தன்னையே அவர்களோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறார். தன்னுடைய பணி இப்படிப்பட்ட புறந்தள்ளப்பட்ட மக்களுக்காக என்று அடையாளப்படுத்திக்கொள்வதன் அடையாளமாக திருமுழுக்குப்பெறுகிறார். இது புதிய போதனை. புதுமையான போதனை. போதனையிலே ஒரு புதிய அத்தியாயம். கடவுள் தன்னை எதற்காக, யாருக்காக அனுப்பியிருக்கிறார் என்பதைத்தெளிவுபடுத்துகிறார். அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்துவதன் அடையாளம் தான், வானிலிருந்து கேட்கப்பட்ட இறைத்தந்தையின் வார்த்தைகள்.
இயேசுகிறிஸ்து நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது இந்த உலக மதிப்பீட்டான, ‘அன்பு செய்கிறவர்களுக்கு மட்டும் அன்பு, பகைவர்களுக்கு பகைமை’ என்பதல்ல. மாறாக, ‘நம்மை வெறுப்பவர்களுக்கு அன்பு, நம்மை சபிப்பவர்களுக்கு ஆசீர்’ என்பதுதான். இயேசுவைப்பின்பற்றி அத்தகைய புதிய வாழ்வுக்காக நம்மை தயாரிப்போம்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்