இயேசு அருளும் வாக்குறுதி
2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12
இயேசு அருளும் வாக்குறுதி
”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த அறை முழுவதுமே கற்களால் மூடப்பட்டிருந்தது. உணவு கொடுப்பதற்கென்று ஒரு சிறிய துவாரம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உணவு மட்டும் ஒரு பாத்திரத்தில் எறியப்படும். ஒரு சன்னல் கூட இல்லாத அந்த அறை, நிச்சயமாக, குளிர்காலத்தில் மிகக் கடுமையாகத்தான் இருந்திருக்கும். தன்னுடைய இரண்டாவது சிறை அனுபவத்தின்போது, இந்த கடிதத்தை அவர் எழுதுகிறார். சிறிதுகாலத்திற்கு பிறகு, அவர் தீர்ப்பிடப்பட்டு கொலை செய்யப்பட இருக்கிறார். நிச்சயமாக, கடவுளோடு இணைந்திருக்கிற மனிதருக்கு தன்னுடைய முடிவை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தன்னுடைய முடிவை பவுல் அறிந்திருக்கலாம் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இயேசு தனக்கு தந்த வாக்குறுதி நிறைவேறுகிற காலம் கனிந்து விட்டது என்று நம்பியதால், தன்னுடைய உள்ளக்கிடக்கைகள் அனைத்தையும் அவர் எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்.
கடவுளுக்காக பணியாற்றுகிற மனிதர்கள் சாவைக் கண்டு ஒருபோதும் அஞ்சியது கிடையாது. ஏனென்றால், சாவு என்பது முடிவல்ல. அது நிலையான வாழ்வின் தொடக்கம். புதிய வாழ்விற்கான வித்து. இறைவனோடு ஒன்றாக இணைகிற அனுபவம். அதனை சாதாரண மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. எனவே தான், சாவு நமக்கு கொடுமையானதாகவும், இறையடியார்களுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவும் இருக்கிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்