இயேசு அருளும் நிறைவாழ்வு
“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்னும் இயேசுவின் மிகப் பிரபலமான இந்த சொற்களை இன்று நாம் சிந்திப்போம்.
நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதுதான் இறைவனின், இறைமகன் இயேசுவின் விருப்பம். நாம் துன்புறவேண்டும், மடியவேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருக்க முடியாது. இதனை நம் விசுவாசத்தின் அடிப்படைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நாம் நிறைவாழ்வு பெறவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். வாழ்வது ஒருமுறை, அந்த ஒரு வாழ்வும் நிறைவானதாக, முழுமை பெற்றதாக அமைய வேண்டும். மானிடர்களின் உளவியல் தேவைகள் பற்றி ஆய்வுசெய்த ஆபிரகாம் மாஸ்லோ என்னும் அறிஞர் “ஆளுமை நிறைவுத் தேவை” (Self Actualization) என்பதையே மானிட நிறைவுத் தேவையாகக் குறிப்பிட்டார்.
இயேசுவின் நிறைவாழ்வு என்பதுவும் அதுவே. எந்த நோக்கத்துக்காக இறைவன் நம்மைப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்படி வாழ்வதுதான் நமது நிறைவாழ்வு. “தந்தை எனக்குக் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதே என் உணவு” (யோவா 4: 34) என்று மொழிந்த இயேசுவைப் போல, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை நிறைவேற்றுவதே நிறைவாழ்வு. அதற்கான அருளை, ஆற்றலை உயிர்த்த இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வோமா!
மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்த நிறைவாழ்வை, உமது தூய ஆவியின் ஆற்றலால் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா