இயேசு – அனைவருக்கும் சொந்தம்
இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருக்கிறது என்று நம்பினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு ஏராளமான மந்திரவாதிகளும் இருந்தனர். அவர்களின் நம்பிக்கைப்படி, ஒருவனிடம் தீய ஆவி இருந்து, அந்தத்தீய ஆவியை ஓட்ட, அந்தத்தீய ஆவியைவிட வலிமையான ஆவியின் பெயரால் கட்டளையிட்டால், அந்த தீய ஆவி பணிந்து ஓடிவிடும். அந்தப்பெயரைக் கண்டுபிடித்துவிட்டால் பேயை எளிதாக ஓட்டிவிடலாம். இப்படித்தான் பொதுவாக தீய ஆவிகளை மக்கள் மத்தியில் வாழ்ந்த மந்திரவாதிகளும், போதகர்களும் செய்துவந்தனர்.
இங்கே நற்செய்தியில் காணப்படுவதும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான். யோவான் இயேசுவிடம் தங்களைச்சாராத ஒருவர் இயேசுவின் பெயரைப்பயன்படுத்தி தீய ஆவிகளை ஓட்டுவதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால், இயேசுவோ ‘நமக்கு எதிராக இராதவர், நம்மோடு இருக்கிறார்’ என்று அவருக்கு பதில்சொல்கிறார். அதாவது, நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறவர்களுக்கு கடவுள் நிச்சயம் உதவுவார் என்பதுதான் இயேசு இங்கே கற்றுத்தருகிற பாடம். குறிப்பிட்ட நபர்தான் நன்மை செய்ய வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் நல்லது செய்யலாம். அவர்களைப்பாராட்டி, ஊக்கப்படுத்துவது, அனைவரும் செய்ய வேண்டியது என்கிற செய்தியும் இங்கே தரப்படுகிறது. நன்மை செய்வது சுய இலாபத்துக்காக அல்ல, மற்றவர்கள் பயன்பெற செய்வது. மற்றவர்களுக்காக செய்வது.
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. தெளிந்த உணர்வோடு, உண்மையான, நேர்மையான உள்ளத்தோடு வாழ்வைத்தேடுகிற, வாழ்கிற எல்லோர்க்கும் உரியவர். அவர் எனக்கு மட்டும்தான் என்கிற குறுகிய உணர்வு நமக்கு இருக்கக்கூடாது. இயேசுவின் அன்பை இந்த உலகில் உள்ள அனைவரும் உணர நம்மால் இயன்றதைச்செய்வோம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்