இயேசு அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.பிலிப்பியர் 2:7
இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவையும் உருவாக்கிய கடவுள் தம்மை எவ்வளவாய் தாழ்த்தி நம்மேல் உள்ள ஆழமான அன்பினால் இயேசு கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை. ஆனால், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசுகிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும். இவ்வளவு மகிமையும், மாட்சியும் உள்ள இறைவன் தம்மை எப்படியெல்லாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார். நமக்காக அவர் முற்றிலும் மனுஷ சாயலாக ரூபமெடுத்து எப்படி எல்லாம் தாழ்த்துகிறார்.
ஆண்டவர் விரும்பும் காரியங்களில் ஒன்று மனத்தாழ்மையாகும். அவர் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து செயல்படுவார். ஆனால் அவரிடத்தில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தோமானால் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். அவரே அவரை தாழ்த்தும் பொழுது நாம் யாவரும் எம்மாத்திரம்?ஆகையால் நாமும் வீண்பெருமைக்கு இடம் தராமல் மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவர்களாக எண்ணி அவர்களை மிகவும் மதித்து அன்புக் கூறுவோம்.விட்டுக்கொடுத்து கெட்டுப்போனதாக எதுவும் இல்லை.
அன்பின் தகப்பனே!
நீரே உம்மை சிலுவை மரணம் வரை எவ்வளவாய் உம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தீர்.நாங்களும் ஒருவர் பேரில் ஒருவர் ஏதாவது குறை இருப்பின் அவையெல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டு விட்டு உமக்கு பிரியமாக வாழ அனுதினமும் எங்களுக்கு போதித்து வழிநடத்த வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே.
ஆமென்!அல்லேலூயா!!.