இயேசுவோடு இருக்க…..
இயேசு 12 அப்போஸ்தலர்களை தோ்ந்தெடுத்த நிகழ்வு இன்றைக்கு தரப்பட்டிருக்கிறது. எதற்காக இயேசு இந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கான காரணம் மாற்கு நற்செய்தி 3: 14 – 15 ல் தரப்பட்டுள்ளது. 1. தம்மோடு இருக்க 2. நற்செய்தியைப்பறைசாற்ற அனுப்பப்பட 3. பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க. இவற்றைப்பற்றி இங்கே சிந்திப்போம்.
- தம்மோடு இருப்பது என்பது அவர்களை தன்னுடைய நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருப்பதைக்குறிக்கிறது. நட்பிற்கு இலக்கணமாக இயேசு இருக்கிறார். எனவேதான், நண்பர்களுக்காக உயிரைக்கொடுப்பதைவிட சிறந்த அன்பு ஒன்றுமில்லை என்கிறார். தம்மோடு இருக்கிற அவர்களை தயார்படுத்துகிறார். தன்னைப்பற்றி அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களோடு உறவாடுகிறார். உரையாடுகிறார். அவர்களை தனது பணிக்காகப் பக்குவப்படுத்துகிறார்.
- தனக்குப்பிறகு நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் தூதுவர்களாக இயேசு அவர்களைப்பார்க்கிறார். இயேசுவைப்பற்றி பேசும் ஊடகங்களாக சீடர்கள் அனுப்பப்படுகிறார்கள். தாங்கள் பார்த்தவற்றை, கேட்டவற்றை, உணர்ந்தவற்றை, அனுபவித்தவற்றை அவர்கள் தங்களின் நற்செய்தியின் சாராம்சமாகப் போதிக்கின்றனர்.
- சாத்தானின் அரசிற்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டதை இது நமக்கு உணர்த்துகிறது. இந்த உலகம் சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இறையரசைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டதை இது குறிக்கிறது.
திருமுழுக்கு பெற்றிருக்கிற நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். அனைவருமே அவருடைய சீடர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரையும் தனது நண்பர்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவருட்சாதனங்கள் வழியாக, திருப்பலி வழியாக நம்மோடு இருந்து நம்மை பக்குவப்படுத்துகிறார். நாம் அனுபவித்தவற்றை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதேபோல சமூக தீமைக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கான செயல்பாடு நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்