இயேசுவைப் பின்தொடர்வோம்
இயேசு தன்னைப் பின்தொடர்வதைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே பேசுகிறார். “பின் தொடர்தல்“ என்கிற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “அகோலேதின்“ (Akoluthein). இந்த கிரேக்க வார்த்தைக்கு ஐந்து அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. ஒரு போர்வீரன் தனது தளபதியைப் பின்தொடர்வது. தளபதி எங்கே சென்றாலும், என்ன செய்யச் சொன்னாலும் அவரையும், அவரது கட்டளையையும் பின்தொடர்வது. 2. ஓர் அடிமை தனது தலைவனைப் பின்தொடர்வது. அடிமைக்கு உரிமையில்லை. தலைவனைப் பின்தொடர வேண்டும். அதுதான் அவனது கடமை. 3. ஒரு ஞானியின் அறிவுரையைப் பின்பற்றுவது. நமது வாழ்வில் பல பிரச்சனைகள் வருகிறபோது, மூத்தவர்களிடத்தில் ஆலோசனைக்காகச் செல்கிறோம். அவர்களது அனுபவத்தில் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்று நடந்து, அதனை பின்பற்றுகிறோம்.
4. நாட்டின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய நிலை. ஒவ்வொரு நாட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிற சட்டங்களை, மதித்து அதற்கேற்ப, அதனை அடியொற்றி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். 5. ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடப்பது. நமக்கு அறிவுபுகட்டுபவர் ஆசான். அவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்பவர். அவருடைய அறிவுரையை நாம் பின்பற்றுகிறோம். இயேசுவைப் பின்பற்றுவது என்பது, நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கே கொடுத்து பின்பற்றுவதுதான் என்பதை, மேலே குறிப்பிட்டிருக்கிற ஐந்து அர்த்தங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்தொடர்தலைத்தான் இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
இயேசு நமக்கு ஆசிரியராக, ஞானியாக. தளபதியாக, தலைவராக, நல்வழியில் நடத்திச்செல்பவராக இருக்கிறார். அவரைப்பின்பற்றினால் நமக்கு நிச்சயம் நிறைவாழ்வு கிடைக்கும். சீடர்கள் இயேசுவை முழுமையாகப் பின்பற்றினார்கள். அதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அதேபோல நாமும் இயேசுவை முழுமையாகப் பின்பற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்