இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான் !
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பல தரப்பட்ட மக்களும் இயேசுவைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் வெவ்வேறாக இருந்தது. எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அவருடைய ஆறுதல் மொழிகளைக் கேட்க விரும்பினர். நற்செய்தியில் மகிழ விரும்பினர். நோயாளர்கள் அவரிடமிருந்து நலம் பெற விரும்பினர். நல் மனம் படைத்தோர் அவரின் அருள்மொழி கேட்டு அவரைப் பின்பற்ற விரும்பினர்.
ஆனால், குறுநில மன்னன் ஏரோது இத்தகைய நோக்கத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. அவன் மனம் குழம்பினான் என்று நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டிய கொடூரன் அவன்! இயேசுவை ஒருசிலர் திருமுழுக்கு யோவானுடன் ஒப்பிட்டுப் பேசியதால், இயேசு யார், என்ன பணி செய்கிறார் என்ற குழப்பத்துக்கான விடை காணவே இயேசுவைக் காண விரும்பினானே அன்றி, அவரிடமிருந்து விடுதலையோ, நலவாழ்வோ, நிறைவாழ்வோ பெற விரும்பி அல்ல. எனவே, அவனுடைய தேடல், ஆர்வம் இறைவனுக்கு ஏற்புடைய தேடல் அல்ல.
நாம் இறைவனை என்ன மனநிலையில் தேடுகிறோம் என்று கொஞ்சம் ஆய்வு செய்துகொள்வோம். அவரிடமிருந்து வாழ்வு தரும் வார்த்தைகளையும், வாழ்வு தரும் திருவுணவையும் பெறத் தேடுகிறோமா? அல்லது வெறுமனே பொருளாதார வளர்ச்சியும், வெற்றியும் பெற மட்டுமே தேடுகிறோமா? நமது இறைத் தேடலைக் கொஞ்சம் தூய்மைப்படுத்திக்கொள்வோமா!
மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். நான் உம்மை அற்புதங்களும், அருளடையாளங்களுக்காக மட்டும் தேடாமல், உமது சீடனாக வாழவும், உம் அருள்மொழிகளைப் பின்பற்றி நடக்கவும் விரும்பி உம்மைத் தேடுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா