இயேசுவுடனான நமது நெருக்கம்
தொழுகைக்கூடத்தில் சுற்றியிருந்த அனைத்து மக்களும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு காலம், தீய ஆவிகள் என்றாலே, போதகர்களே பயந்து நடுங்கிய நாட்களில், இவ்வளவு துணிச்சலாக, போதனைப்பணிக்கு வந்து சிலநாட்கள் கூட ஆகாத, தச்சரின் மகன், நமக்கெல்லாம் அறிமுகமானவர், இவ்வளவு துணிவோடு போதித்து, தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை பெற்றிருக்கிறாரே? நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டும். அவரிடத்தில் இருக்கிற சக்தி, அளப்பரியதுதான். இது போன்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான், இயேசு தனது சீடரின் வீட்டிற்குச் செல்கிறார்.
இயேசு நிச்சயமாக, பேதுருவின் வீட்டிற்கு உரிமையோடு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் தொழுகைக்கூடத்தில் போதித்திருக்கிறார். சற்று இளைப்பாற அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, பேதுருவின் மாமியார் உடல்சுகவீனம் இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், அவருடைய சீடர்கள் பேதுருவின் மாமியார் உடல் சுகவீனம் இல்லாமல் இருப்பதை அறிவிக்கின்றனர். இயேசுவோடு சீடர்களும் பழக ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் தான் சென்றிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக இயேசுவுடனான அவர்களது நட்புறவு ஆழப்பட்டிருந்தது. இயேசுவை வேறொரு மனிதனாக அவர் நினைக்கவில்லை. அதுதான் இயேசு. இயேசுவிடத்தில் வருகிற யாரும், தங்களை அந்நியர்களாக நினைக்க மாட்டார்கள். இயேசுவோடு நாம் பழகுகிறபோது, அவரில் ஒருவராக நாம் மாறிவிடுகிறோம். அவரை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டுவிடுகிறோம்.
இயேசுவுடன் அவருடைய சீடர்கள் நட்புறவோடு பழகினார்கள். அவரை ஏற்றுக்கொண்டார்கள். இயேசுவின் அன்பையும், அருளையும், மன்னிப்பையும், இரக்கத்தையும் பெற்றுக்கொண்டார்கள். நாம் எப்போது இயேசுவோடு நெருங்கி வரப்போகிறோம்? எப்போது அவரை நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்போகிறோம்? எப்போது நமது கவலைகளை, கண்ணீரை, மகிழ்ச்சியான தருணங்களை அவரோடு பகிர்ந்து கொள்ளப்போகிறோம்? சிந்திப்போம். இயேசுவோடு நெருங்கிவருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்