இயேசுவின் விழுமியங்கள்
இயேசுவின் இன்றைய நற்செய்தி வார்த்தைகள்(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19), அவரைப் பின்தொடரக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்களாகச் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிறவர்கள் இவ்வளவு துன்பங்களைச் சந்திக்க முடியுமா? தங்களது உயிரைக் கொடுக்க முடியுமா? இவ்வளவு வேதனைகளுக்கு நடுவிலும், அவர்கள் தங்களது விசுவாசத்தைக் காத்துக் கொள்ள முடியுமா? நமது மனித வாழ்க்கையில் இவையெல்லாம் சாத்தியக்கூறுகளா? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் நமது வாழ்க்கையில் எழும். ஏனென்றால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற வார்த்தைகள் கேட்பதற்கே பயங்கரமாக இருக்கின்றன. ஆனால், இயேசுவின் வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள். அவை சாத்தியமே என்பதை வரலாறு கூறுகிறது.
தொடக்க கால கிறிஸ்தவர்கள் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களது உடல் விலங்குகளுக்கும், தீச்சுவாலைகளுக்கும் இரையாகப்போகிற சந்தர்ப்பத்திலும், கொடூரமான உடல் உபாதைகளால், காயப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கவில்லை. அதற்காக உயிரை விடுவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். ஒரு மனித நிலையில், இது கடினமான ஒன்றுதான். ஆனால், துன்புறுத்தப்படுகிறபோது, நாம் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை. கிறிஸ்துவும் நம்மோடு, நமக்காக, நம்மில் துன்புறுகிறார். நமது வேதனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆக, தொடக்க கால கிறிஸ்தவர்கள், விசுவாசத்திற்காக உயிரைவிட்டவர்கள், இதனை முழுமையாக அனுபவித்திருந்தார்கள். எனவே தான், அவர்களால் மகிழ்ச்சியாக, கிறிஸ்துவுக்காக உயிர் விட முடிந்தது.
இன்றைய வாழ்வில், நாம் உயிர் விடத்தேவையான சூழ்நிலைகள் இல்லை. ஏனென்றால், தொடக்க கால கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிடும்போது, நமது வாழ்க்கைத்தரமும், சுதந்திரமும், மனித சமுதாய சகிப்புத்தன்மையும், பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய காலச்சூழலில், இயேசுவின் விழுமியங்களுக்கு நமது வாழ்வு மூலமாக, உதாரணமாக வாழ்வதுதான், சிறப்பான பங்களிப்பாக இருக்க முடியும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்