இயேசுவின் விழுமியங்களும், மதிப்பீடுகளும்
இயேசு பாலைவன அனுபவத்திற்கு பிறகு முதன்முதலாக தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். அவர் தொடங்கிய முதல் பகுதி கலிலேயா. அவர் போதித்த முதல் இடம் தொழுகைக்கூடம். இதனுடைய முக்கியத்துவத்தை இப்போது பார்ப்போம். அவர் தொடங்கக்கூடிய இடம் அவர் வாழ்ந்த கலிலேயா. கலிலேயா ஒரு வளமையான பகுதி. கலிலேயாவில் மக்கள் ஏராளமானபேர் வாழ்ந்தனர். மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக இது விளங்கியது. முற்போக்குச் சிந்தனையும், புதுமையை வரவேற்கக்கூடியவர்களாகவும் இங்குள்ள மக்கள் வாழ்ந்தனர். வீரத்திலும், துணிவிலும் வலிமை உள்ளவர்களாக வாழ்ந்தனர். எதற்கும் அஞ்சாத உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் கலிலேயர்கள்.
இயேசு தொழுகைக்கூடத்தில் தனது போதனையை ஆரம்பிக்கிறார். யூதர்களின் வழிபாட்டின மையப்பகுதியாக தொழுகைக்கூடம் ஆக்கிரமித்திருந்தது. தொழுகைக்கூடத்தில் செபமும், இறைவார்த்தையும் மையமாக விளங்கின. தொழுகைக்கூடத்திலிருக்கிற ஏழுபேர் இறைவார்த்தையை வாசித்தனர். பொதுவாக, முதலில் எபிரேய மொழியில் வாசிக்கப்பட்டது. பெரும்பாலும் எபிரேய மொழி அவர்களுக்கு புரியாததால், அதனுடைய மொழிபெயர்ப்பான அரேமிய நூலும் அல்லது கிரேக்க நூலும் வாசிக்கப்பட்டது. திருச்சட்ட நூலிலிருந்து வாசகம் என்றால், ஒவ்வொரு இறைவசனத்திற்குப்பிறகு விளக்கநூலும், இறைவாக்கினர் பகுதியிலிருந்து என்றால், மூன்று இறைவசனங்களுக்கு பிறகு விளக்கநூலும் வாசிக்கப்பட்டது. இயேசுவின் போதனைக்கு பிறகு, அவரைப்பற்றிய மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து இருந்ததாக நற்செய்தியாளர் கூறுகிறார். இந்த இரண்டு இடங்களுமே இயேசு நிறைந்த மதிப்போடு தனது பயணத்தை தொடங்கியதாக, நமக்கு சொல்கிறது. இவ்வளவு மதிப்பையும் எப்பாடுபட்டாவது தக்கவைக்க வேண்டும் என்று, இயேசு விரும்பியது இல்லை. எப்படி என்றாலும், உண்மையாக வாழ வேண்டும் என்றுதான் விரும்பினார். புகழுக்காகவோ, பெயருக்காகவோ இயேசு எப்போதும், தனது விழுமியங்களை விட்டுக்கொடுத்தது இல்லை.
இன்றைய காலச்சூழ்நிலையில் விழுமியங்களும், மதிப்பீடுகளும் ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை. சந்தர்ப்பவாதம் தான் மக்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது. விழுமியங்கள் வாழ்வின் மையம் பெற வேண்டும். சந்தர்ப்பவாதம் களையப்பட வேண்டும். அதற்காக நாம் இயேசுவிடம் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்