இயேசுவின் விண்ணேற்றம்
சீடர்கள் மகிழ்வோடு யெருசலேம் திரும்புகிறார்கள். அந்த மகிழ்ச்சியோடு கடவுளைப்போற்றிப் புகழ்கிறார்கள். சீடர்களின் மகிழ்விற்கு என்ன காரணம்? எது இயேசுவின் பிரிவிலும் சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவியது? காரணம், இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு இருந்த இயேசு, இப்போது அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறார். எனவே அந்த பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ”யாரிடம் செல்வோம் இறைவா?” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்த சீடர்களால், எப்படி இயேசுவின் பிரிவை மகிழ்வோடு பார்க்க முடிந்தது?
சீடர்களின் உறுதிப்பெற்றிருந்த விசுவாசம் தான் அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தது? அது என்ன விசுவாசம்? இயேசு எங்கும் செல்லவில்லை. நம்மில் அவர் கலந்திருக்கிறார். இத்தனை நாட்களாக, அவர் ஒரு இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால், இப்போது எங்கு சென்றாலும் இருக்கிறார். அந்த எண்ணம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், உயிர்த்த இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை உற்சாகப்படுத்துகிறார். அவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார்.
நமது வாழ்விலும் இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் மகிழ்ச்சி அனுபவமாக இருக்க வேண்டும். அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தர வேண்டும். உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் நமது வாழ்வை ஊக்கப்படுத்த வேண்டும். இயேசுவின் பிரிவு நம்மைவிட்டு பிரிவது அல்ல. அது நம்மில் ஒன்றாக கலந்துவிடுகின்ற இணைப்பு.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்