இயேசுவின் விண்ணேற்றம் !
இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவில் நமது சிந்தனைகள் என்ன?
- திருச்சபையின் தலையான இயேசு விண்ணகம் சென்றதால், அவரது உடலாகிய திருச்சபையும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” என்னும் பவுலடியாரின் சொற்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும்.
- நமது எண்ணங்களும், சொற்களும், வாழ்வும் விண்ணகம் சார்ந்ததாக அமைய வேண்டும். மண்ணக ஆசைகள், ஏக்கங்கள், தேவைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காமல், விண்ணகம் சார்ந்தவற்றுக்கே முதலிடம் வழங்கவேண்டும். #8220;முதலில் இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்னும் அருள்நாதரின் சொற்களை நினைவில் கொள்வோம்.
- இறைப் பற்று, இறையச்சம், விண்ணகம், நரகம் (இறைவனைப் பிரிந்து வாழும் நிலை) என்னும் மதிப்பீடுகளில் நமது நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வோம். இறுதிக் காலம் பற்றிய நமது எண்ணங்கள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். ‘விண்ணகம் என்ற ஒன்று உண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்’ என்னும் சிந்தனையை இன்றைய இளைய தலைமுறையினரிடம் விதைப்போமாக!
மன்றாடுவோம்: விண்ணகம் சென்று தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்கு இடம் தயாரிப்பதற்கு முன்னேற்பாடாக விண்ணகம் சென்றுள்ளீர். தந்தையிடம் எங்களுக்காகப் பரிந்துபேசி, நாங்கள் விண்ணுக்குரியவர்களாக வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.;
~ அருட்தந்தை குமார்ராஜா