இயேசுவின் வாழ்வு
நமது குழந்தைகளுக்கு பிறந்தநாள் வருகிறபோது, அவர்களை ஆலயத்திற்கு கொண்டு சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு, அருட்பணியாளர்களிடம் சிறப்பாக செபிக்கச் சொல்வோம். அதுபோல, பெரியவர்களிடமும் நாம் அவர்களைக் கொண்டு செல்வோம். இது எல்லா மக்கள் மத்தியிலும் காணப்படக்கூய ஒரு நிகழ்வு. இதைத்தான் யூதப்பாரம்பரியத்தில் வாழ்கின்ற பெண்களும் செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை, மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு போதகர், ஆசீர்வதிக்க வேண்டுமென கொண்டுவருகிறார்கள்.
இயேசு தன்னிடம் கொண்டு வரப்பட்ட குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்கு தயாராக இருக்கிறார். தனக்கு களைப்பு இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குழந்தைகளைச் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். குழந்தைகள் யூத சமுதாயத்தில் பொருளாக பார்க்கப்பட்டவர்கள். வயதுவருகிறவரை, அவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் தான் வளர முடியும். பெண் குழந்தை என்றால் மதிப்பே கிடையாது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் குழந்தைகளையும் இயேசு அரவணைப்பது, மிகப்பெரிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. கடவுள் தனக்கு கொடுத்த ஆசீரை, மற்றவர்களுக்கு எப்போதெல்லாம் கொடுக்க முடியுமோ, எந்த வழியில் எல்லாம் கொடுக்க முடியுமோ, அத்தனை வழியிலும் அவர் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார் என்பதை நாம் இங்கே அறிய வருகிறோம்.
அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனதை நாம் இயேசுவிடம் கேட்க வேண்டும். அதேபோல அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்கிற எண்ணமும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். சுயநலம் அறுத்து, பொதுநலன் பேணி மக்கள் மகிழ்வாக வாழ, நம்மால் இயன்றதைச் செய்வோம். மகிழ்வோடு வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்