இயேசுவின் வழியில் நமது வாழ்வு
இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் வாழ்வைப்பற்றிய மூன்று முக்கிய செய்திகளைத் தருகிறது. முதல் செய்தி: இயேசு தன்னை கடவுளின் ஊழியனாக அல்ல, மாறாக, தன்னை கடவுளின் மகனாகவே வெளிப்படுத்தினார். ஊழியர்கள், இறைவாக்கினர்களைக் குறிக்கிறது. மகன் இயேசுவைக்குறிக்கிறது. இயேசு இறைவாக்கினராக அல்ல, இறைமகனாக நேரடியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே நாம் பார்க்க முடிகிறது. இது யூதர்களுக்கு இயேசுவால் விடப்பட்ட நேரடியான சவால். இயேசுதான் கடவுளின் மகன் என்பதை, ஆணித்தரமாக வெளிப்படுத்திய பகுதி இது.
இரண்டாவது செய்தி: இயேசுவுக்கு தான் இறக்கப்போகிறேன் என்பது தெரிந்திருந்தது. அது இயேசுவுக்கு அதிர்ச்சிகரமான செய்தியோ, ஆச்சரியமான செய்தியோ அல்ல. தான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையின் முடிவு, இறப்பாகத்தான் இருக்க முடியும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அப்படி அறிந்திருந்தாலும், துணிந்து தனது வாழ்வை நகர்த்துவது அவரது மனவலிமையைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி: தான் இறக்கப்போவது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு தான் மகிமைப்படுத்துவதும் உறுதி, என்று இயேசு முழுமையாக நம்பினார். கட்டுவோர் விலக்கிய கல்லே, கட்டடத்திற்கு மூலைக்கல் ஆனது போல, சிலுவையில் அறையப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட இயேசு வழியாகத்தான் நாம் மீட்பு பெறமுடியும்.
இயேசு தான் நம் மீட்பராக இருக்கிறார். அவரிடத்தில் நாம், நமது முழுமையான நம்பிக்கை வைக்கிறபோதுதான், நமது கிறிஸ்தவ வாழ்க்கை உயிரோட்டம் பெறுகிறது. இயேசுவின் வழியில் நாமும், நமது வாழ்வை, கடவுள் நம்பிக்கையில் உறுதியாக நம்புவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்