இயேசுவின் வருகைக்காக தயாரிப்போம்
மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை இயேசுவின் பணிவாழ்விலிருந்து தொடங்குகிறார். அவரது குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் தரப்படவில்லை. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருந்த நிகழ்விலிருந்தும் தொடங்கவில்லை. மாறாக, இறைவாக்கினர்களின் கனவு வார்த்தைகளோடு தனது நற்செய்தியைத்தொடங்குகிறார். மாற்கு நற்செய்தியாளர் இறைவாக்கினரின் வார்த்தையோடு தொடங்குவதின் பொருள் என்ன? என்று பார்ப்போம்.
”இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்கிற இந்த இறைவார்த்தை மலாக்கி 3: 1 ல் காணப்படுகிற வார்த்தைகள். மலாக்கி இறைவாக்கினர் காலத்தில், குருக்கள் தங்கள் கடமையில் தவறினார்கள். பலிப்பொருட்கள் இரண்டாம் தரமானதாகவும், குறைபாடுள்ளதாகவும் இருந்தது.ஆலயப்பணி அவர்களுக்கு களைப்பை தருவதாகவும், சுமையாகவும் இருந்தது. எனவே, தூதர் வந்து, இந்த வழிபாட்டு முறைகளின் குறைபாடுகளை அகற்றி, மீட்பர் வருவதற்காக வழியை ஆயத்தம் செய்வார் என்று, இறைவாக்குரைக்கப்பட்டது. அதாவது, மீட்பரின் வருகை தகுந்த தயாரிப்போடு இருக்க வேண்டும் என்ற செய்தியை நாம் இதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம். கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம்..
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்