இயேசுவின் மறைப்பணி உத்தி
“பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. “கூக்குரலிட மாட்டார். தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை நெரிந்த நாணலை முறியார்” என்னும் எசாயா இறைவாக்கினரின் வாக்கு நிறைவேறியதாக வாசகம் முடிகிறது.
ஒரு பக்கம் இயேசு பரிசேயரின் சூழ்ச்சியை அறிந்தவராய், அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என்று தாம் குணமாக்கியவர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார். ஆனால், அதே வேளையில் தமது குணமாக்கும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் சென்றவிடமெல்லாம் தொடர்ந்து ஆற்றினார். இதையே நாம் அவரது மறைப்பணி உத்தி என்று அழைக்கலாம்.
பரிசேயர்களுக்கு அஞ்சி, தமது பணியை இயேசு கைவிட்டுவிடவில்லை. ஆனால், இயன்றவரையில் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தம்மைக் காத்துக்கொண்டார். தமது “நேரம் வரும்வரையில்” தாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வீணாகச் சிக்கிக்கொண்டு, பணி செய்யும் காலத்தை இழக்க வேண்டாம் என்னும் அறிவார்ந்த சிந்தனையையே இது காட்டுகிறது. “பாம்புகளைப்போல் முன்மதி உடையவர்களாய் இருங்கள்” என்;னும் இயேசுவின் அறிவுரைக்கு அவரது இந்த உத்தியே சிறந்த எடுத்துக்காட்டு.
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போலவே, நாங்களும் காலம், இடம், சூழல் அறிந்து, மறைப்பணியாற்றும் முன்மதியையும், ஞானத்தையும் எங்களுக்குத் தாரும், ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா