இயேசுவின் பிறர்நலம்
தற்பெருமை நிறைந்த உலகம் இது. இங்கே வாழக்கூடிய தலைவர்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். தங்களோடு சில முகஸ்துதிகளை வைத்துக்கொண்டு, அவர்களின் புகழ்ச்சி மழையில் இன்பம் காண்கின்றனர். தாங்கள் செய்வதையும் புகழ்ச்சிக்காகவே செய்கின்றனர். இந்த உலகத்தில் உதவி செய்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்பெருமைக்காகச் செய்பவர்கள் 2. தன்னை வளா்த்துக் கொள்வதற்காகச் செய்கிறவர்கள் 3. தன்னலமில்லாமல் செய்கிறவர்கள்.
தற்பெருமைக்காகச் செய்கிறவர்கள், தங்களது பெயர், புகழ் மற்றவர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதைச்செய்தாலும் தாங்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. தன்னை வளர்த்துக்கொள்வதற்காகச் செய்கிறவர்கள் எதிர்பார்த்து செய்கிறவர்கள். இன்றைக்கு நான் இதைச்செய்கிறேன் என்றால், நாளை இது எனக்கு கிடைக்கும், என்கிற எதிர்பார்ப்போடு செய்கிறவர்கள் தான் இவர்கள். மூன்றாவது வகையான மக்கள் எதையும் எதிர்பார்க்காமல், புகழுக்காக அல்லாமல், நன்மையைச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறவர்கள். இயேசு இந்த மூன்றாம் வகையைச் சார்ந்தவர். அந்த பணக்கார மனிதன் இயேசுவிடத்தில் ”நல்ல போதகரே” என்று சொல்கிறபோது, நிச்சயமாக அந்த வார்த்தைக்கு இயேசு பொருத்தமானவர். அந்தளவுக்கு மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனாலும், அவர் தற்பெருமையை விரும்புகிறவர் அல்ல. தன்னுடைய புகழுக்கும், பெயருக்கும் காரணமானவர் இறைவனே என்று மொழிகிறார்.
நமது வாழ்க்கையில் நாம் எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துகிறவர்களாக வாழ வேண்டும். நாம் செய்யக்கூடிய உதவியை சுயநலத்தோடு அல்லாமல், தற்பெருமைக்காக அல்லாமல், மற்றவர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்வோம். அதையும் கடவுளுக்கு காணிக்கையாக்குவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்