இயேசுவின் பார்வை
இயேசுவைப்போல எளிதான, மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை வைத்து, புரிய முடியாத விண்ணரசை புரிய வைக்கிறவர் யாரும் இருக்க முடியாது. அவருடைய போதனையை முழுவதுமாக நாம் ஒன்றுதிரட்டிப்பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புலப்படும். இன்றைய நற்செய்தியும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அறிய முடியாத, புரிய முடியாத வாழ்க்கை இரகசியங்களை இயேசு வெகுஎளிதாக நமக்குப் புரிய வைத்துவிடுகிறார். நமது வாழ்வின் வெற்றி பெற, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும். அதுவே நாம் அடைய வேண்டிய இலக்கை வெகு எளிதாகக் காட்டிவிடும். இயேசுவின் வாழ்க்கை ஒரு வெற்றி வீரரின் வாழ்க்கை. அவரது வெற்றிக்கு காரணம், அவர் இந்த உலகத்தையும், நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்த்தவிதம் தான், என்பது அவரின் வாழ்வை சிந்தித்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும்.
கடற்கரையில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதிக்கிறபோது, அங்கே இருக்கிற மீனவர்களைப் பார்க்கிறார். மீன்களைப் பார்க்கிறார். வலைகளைப் பார்க்கிறார். அதிலிருந்து மக்களுக்கு இறையாட்சியின் தத்துவத்தை விளக்குகிறார். மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறார். பயிரிடுவதைப் பார்க்கிறார். களைகளைக் காண்கிறார். அருமையான செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார். தொழுகைக்கூடத்தில் மக்கள் நடுவில் போதிக்கிறார். நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு சுகம் தருகிறார். அதில் பிரச்சனைகளைச் சந்திக்கிறார். ஆனால், அதன் வழியாக புதிய செய்தியை, யாரும் இதுவரை சிந்தித்திராத கோணத்தை அவர்களுக்குக் காட்டுகிறார். இவ்வாறு அவர் வாழ்வில் பேசிய அனைத்து வார்த்தைகளும், சந்தித்த நிகழ்வுகளும் மிகப்பெரிய வரலாறாக பதியப்படுகிறது. இவையனைத்திற்கும் அடிப்படை காரணம், இயேசுவின் பார்வை. ஒவ்வொன்றையும் பார்க்கிறார். கவனமாகப் பார்க்கிறார். அது கற்றுத்தரும் பாடத்தை உணர்ந்து கொள்கிறார்.
நமது வாழ்விலும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக பார்க்க வேண்டும். அது நமக்கு தரும் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று, பெரும்பான்மை மக்கள் வாழும் வாழ்வை வாழாமல், துடிப்போடு, வாழ்வின் அனுபவத்தோடு, அது தரும் படிப்பினைகளோடு நாம் வாழ பழகிக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்