இயேசுவின் பரிவு
மத்தேயுவின் அழைப்பு நிகழ்ச்சி இன்று நமக்கு தரப்பட்டுள்ளது. மத்தேயுவின் நெஞ்சிலே ஒரு ஆறாத ரணம் இருந்துகொண்டே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர் இந்த மத்தேயு. வரிவசூலிக்கிறவர் செய்கிற அடாவடித்தனத்தை, நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. மத்தேயுவும் அப்படிப்பட்டவராக மக்களால் பார்க்கப்பட்டார். மக்கள் சமுதாயத்திலிருந்து, விலக்கி வைக்கப்பட்டார். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் உறவு இல்லையென்றால், அனைத்துமே வீண் என்பதை, நிச்சயம் அவர் அறிந்திருப்பார். ஆனால் என்ன செய்ய? உறவோடு வாழ, யாருமே முன்வரவில்லை. தன்னை மன்னித்து, தான் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க யார் வருவார்? இந்த கேள்விகள் இருக்கிறபோதுதான், மத்தேயுவிற்கு இயேசுவின் அழைப்பு வருகிறது.
இயேசு பாவிகளைத் தேடி வந்திருக்கிறார் என்கிற செய்தி, அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனை உண்மையில், அவருடைய செயல்பாடுகளில் எதிரொலிக்குமா? என்கிற சந்தேகமும் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கும். எனவே தான், ஒருவிதமான படபடப்போடு, இயேசுவிடம் செல்வதா? வேண்டாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கிறபோது, இயேசுவிடமிருந்து வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியும், ஆச்சரியமும். இங்கே இயேசுவின் பணிவாழ்வின் ஆழத்தையும் நாம் பார்க்க முடிகிறது. இயேசு கடலோரம் சென்று கொண்டிருக்கிறார். அப்படிச் செல்கிறபோதும், அவர் யாருக்கு ஆறுதல் தேவையோ அவர்களைப்பற்றியே நினைத்துக்கொண்டும், யாராவது தென்படுகிறார்களா? எனப் பார்த்துக்கொண்டும் செல்கிறார். செல்கிற எல்லா இடங்களிலும், ஆறுதல் தேவைப்படுகிற அனைவருக்கும், அவர் தந்தையின் அன்பை எடுத்துச் செல்கிறார். அதுதான் இயேசு.
நாம் செய்கிற சிறிய செயலில் கூட கருத்தூன்றி இருக்க வேண்டும், என இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பார்க்கிற மனிதர்கள், நடக்கிற நிகழ்வுகள் அனைத்துமே நமக்கு ஆழமான செய்தியை, நமது வாழ்வையே மாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கலாம். செய்யக்கூடிய செயல் அனைத்தையும் முழுஈடுபாட்டோடு செய்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்