இயேசுவின் பணித் திட்ட அறிக்கை !
லூக்கா நற்செய்தியின் தொடக்கத்திலேயே நற்செய்தியாளர் தம் நூலின் இலக்கைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் வாழ்விலும், பணியிலும் தாம் கேட்டறிந்த அனைத்தையும் கருத்தாய் ஆய்ந்து, ஒழுங்குபடுத்தி எழுதுவதாகக் கூறுகிறார் லுhக்கா. அவ்வாறு ஒழுங்குபடுத்தி எழுதிய இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைத்தான் இன்றைய செய்தியாக நாம் வாசிக்கிறோம்.
எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கை வாசிக்கும் இயேசு, அந்த இறைவாக்கு தம்மில் அன்று நிறைவேறிற்று என்று அறிவிக்கிறார். லுhக்காவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. எனவேதான், இயேசுவின் பணித்தொடக்கமாக இதை முன்வைத்திருக்கிறார். தான் செய்யவிருக்கும் பணி எத்தகையது என்னும் இலக்குத் தெளிவு இயேசுவிடம் இருந்தது, அதை இயேசு அனைவருக்கும் அறிவித்தபின்னரே, செயல்படத் தொடங்கினார் என்று இந்நிகழ்ச்சியின் மூலம் அறியவருகிறோம். இயேசுவின் தலைசிறந்த தலைமைப் பண்புகளுள் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். தான் செய்யவிருக்கும் பணி என்ன?, யாருக்கு? என்னும் தெளிவு அவரிடம் இருந்தது. நம்மிடம் இருக்கிறதா?
மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது பணித்திட்ட அறிக்கை உமது இலக்குத் தெளிவைக் காட்டகிறது. நானும் உம்மைப் போல, பணி இலக்குகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்
–: அருள்தந்தை குமார்ராஜா