இயேசுவின் நிறைவான வாழ்வு
திருமுழுக்கு யோவான் பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் செய்தார் என்பதை விட, அவருடைய வலிமையான போதனை தான், மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த அளவுக்கு அவருடைய வார்த்தைகள் மக்களின் மனதை துளைத்து, அவர்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்றது. மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இயேசு இந்த போதனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
இயேசுவின் போதனையைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த ஆளுமையின் பரிமாணமாக காணப்படுகிறது. அவரது போதனையும் சரி, அவர் செய்த புதுமைகளும் சரி, இதனைவிட சிறப்பாக, அவருடைய வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஏழை, எளியவர்களையும் சமமாக மதிக்கிறார். மக்கள் நடுவில் வாழ்கிறார். அதே வேளையில், தனது மதிப்பீடுகளை எதற்காகவும் இழப்பதற்கு அவர் தயாரில்லை. வெறும் வார்த்தையால் மட்டுமல்ல, தனது வாழ்வாலும் போதிக்கிறார். தன்னை எதற்காக, இறைத்தந்தை அனுப்பினாரோ, அதனை அப்பழுக்கு இல்லாமல் செய்து முடிப்பதை அவர் இலக்காகக் கொண்டு வாழ்கிறார்.
நமது வாழ்க்கையில் நாம் செய்வதற்கென்று நமக்கு பல கடமைகள் இருக்கிறது. நமது கடமைகளை நாம் சரிவரச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். நமது கடமைகளை எக்காரணம் கொண்டு புறந்தள்ளி விடாமல், சிறப்பாகச் செய்து முடிக்க, கடவுளின் அருள் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்