இயேசுவின் தலைமுறை அட்டவணை !
மத்தேயு நற்செய்தி இயேசுவின் தலைமுறை அட்டவணையோடுதான் தொடங்குகிறது. ஒரு மனிதரின் தலைமுறை வரிசையை எண்ணிப் பார்ப்பது, மத்தேயுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதுபோலவே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் முக்கியமானதாகத்தான் இருக்கிறது.
ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு. நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே, நாம் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறையும் அவ்வாறே வாழ வழிவகுப்போம்.
மன்றாடுவோம்: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடமாய் இருக்கிறீர் (திபா 90:1). எனவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் முன்னோருக்காக, முந்தின தலைமுறையினர் எங்களுக்கு விட்டுச் சென்ற நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம். வருங்கால தலைமுறைகளுக்காக நாங்கள் நிறைவான வாழ்வு வாழ எங்களுக்கு வரம் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா