இயேசுவின் தன் முனைப்பு !
பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது.
இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும் என்று காத்துக்கொண்டிராமல், தாங்களாகவே மாற்றத்தை உருவாக்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். இயேசுவின் தன் முனைப்பை, தன்னார்வத்தை நற்செய்தி நூல்களி;ன் பல பக்கங்களில் பார்க்கிறோம். சக்கேயுவைப் போலப் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் தன்முனைப்புதான். நாமும் இயேசுவைப் போல ஏன் தன் முனைப்பு உடையவர்களாக, தன்னார்வம் கொண்டவர்களாக, முதல் முயற்சியை நாமே எடுப்பவர்களாக இருக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திராமல் நாமே ஏன் வாய்ப்புகளை உருவாக்கக்கூடாது!
மன்றாடுவோம்: தாமாகவே முன் வந்து சக்கேயுவை அழைத்து, அவரோடு விருந்துண்டு, அவரது வாழ்வை மாற்றிய அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் தன்முனைப்பு உள்ளவர்களாகச் செயல்பட உமது தூய ஆவியை எங்களுக்கு நிறைவாகத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா