இயேசுவின் தனிமை
இயேசு படகிலேறி தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார். இப்போதுதான் அவரது உறவினர் திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பு இயேசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த இறப்பு அவருக்குள்ளாக நிச்சயம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், திருமுழுக்கு யோவான் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை, இயேசு அறியாதவரல்ல. அவருக்கு நேர்ந்த கதி, நிச்சயம் தனக்கும் நேரும் என்பதை இயேசு உணர்ந்திருப்பார். அந்த உணர்வு அவருக்குள்ளாக பல கேள்விகளை உண்டுபண்ணியிருக்கும்.
இயேசு மக்களிடமிருந்து தனிமையான இடத்திற்குச் சென்றதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகிறது. அவரின் பணிவாழ்வில் அவரது உடலுக்கு ஓய்வு தேவையாயிருந்தது. எப்படியும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்றிருக்கலாம். யோவான் கொலை செய்யப்பட்டிருக்கிற சூழலில் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இயேசு நினைத்திருக்கலாம். யோவானின் இறப்பு, அவரது சிலுவை மரணத்தை நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். அந்த கலக்கம், கவலை, கண்ணீர், இயேசுவுக்கு தளர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். எனவே, அவர் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும், ஆன்ம அளவிலும் புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்த தனிமையை அவர் விரும்பியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், ஓய்வு எடுக்க அவர் செல்கிறார். அந்த ஓய்வு என்பது வெறுமனே இருப்பது அல்ல. தந்தையோடு இரு்பபது. தூய ஆவியின் துணையோடு தனது வாழ்வை சிந்தித்துப் பார்ப்பது.
நமது வாழக்கையிலும் வேகமான இந்த உலகத்தில், அவ்வப்போது நாம் கடவுளோடு, கடவுள் முன்னிலையில் அமர்ந்து நமது வாழ்வை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுளின் வழிநடத்துதல், அவர் நமக்கு கூறக்கூடிய செய்திகளைச் சிந்தித்துப் பார்த்து, நமது வாழ்வை நாம் நகர்த்திச் செல்ல வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்