இயேசுவின் சமூக நீதியும், சமூக அக்கறையும்
இயேசு ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிற நிகழ்வை நாம் பார்க்கலாம். நாணயம் மாற்றுவோரையும், விலங்குகள் விற்போரையும் இயேசு துரத்துகிறார். எதற்காக அன்பே உருவான இயேசு, வன்முறையைக் கையிலெடுப்பது போல பேசுகிறார்? எது இயேசுவை இந்த அளவுக்கு கோபப்படுத்துகிறது? யெருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்த, குறிப்பிட்ட நாணயத்தைத்தான் செலுத்த வேண்டும். வெளிநாடு வாழ் யூதர்கள், தங்களின் நாணயங்களைக்கொண்டு, ஆலய வளாகத்தில், ஆலயத்தில் செலுத்த வேண்டிய நாணயங்களை மாற்றிக்கொள்வார்கள். அதேபோல, விலங்குகளை பலிசெலுத்த எங்கு வேண்டுமானாலும் அவைகளை வாங்கலாம். ஆனால், பலிசெலுத்தப்படும் விலங்குகள் குறைபாடுகளோடு இருக்கக்கூடாது. வெளியே விலங்குகளை வாங்கினால், அதிலே குறைகண்டுபிடித்து, பலிசெலுத்தவிடாமல் செய்து, அதிலே கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறவர்கள் இருந்தனர். இவ்வாறு, வியாபாரத்தில் முறைகேடு நடந்து வந்தது.
ஆண்டவரை வழிபடும் வழிபாடே முறைகேடுகளுக்கு காரணமாக அமைகின்ற அளவுக்கு, வழிபாட்டை ஒரு கேவலமாக மாற்றிவிட்டார்களே என்பதுதான் இயேசுவின் ஆதங்கம். அது சமூக நீதியின் மீது இயேசு கொண்டிருந்த தாகத்தின் வெளிப்பாடு. சமூத்தில் கண்ணெதிரே நடந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் ஒரு சமூகப்போராளியின் கூக்குரல். நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்பது இயேசுவுக்கு தெரியும். மக்களின் ஆதரவு இயேசுவுக்கு இருந்தாலும், எந்தநேரமும் தனது தலைக்கு கத்தி வரலாம் என்ற நிலைதான் இயேசுவின் நிலை. ஆனாலும், இயேசு சமூக நீதிக்கு உறுதுணையாகிறார்.
இயேசுவின் இந்த நிலை, கிறிஸ்தவர்களாகிய நாம் சமூக அநீதிக்குத்துணை போகக்கூடாது என்பதையும், அநீதி நடக்கின்றபோது, அதனைத்தட்டிக்கேட்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. எனவே தான், கிறிஸ்தவ வாழ்வு ஒரு சவாலான வாழ்வு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம்? அத்தகைய சவாலான வாழ்விற்கு நாம் தயாரா? சிந்திப்போம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்