இயேசுவின் உயிர்ப்பு கவலையைப் போக்குகிறது !
இயேசுவின் உயிர்ப்பு மனக் கவலையை, கலக்கத்தை அகற்றும் அருமருந்து என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் இனிமையுடன் விளக்குகிறது. எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்கள் இருவரும் மிகுந்த கவலையுடன் நடந்துசெல்கின்றனர். “அவர்கள் முகவாட்டத்துடன் நின்றனர்” என்று லூக்கா நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
நாசரேத் இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகின்றார் என்று அனைவரும், குறிப்பாக இந்தச் சீடர்கள், எதிர்பார்த்திருந்தனர். ஆனால், “தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்” எனத் தங்களின் கவலை, கலக்கம், ஏமாற்றம், விரக்தி… அனைத்தையும் இயேசுவிடமே பகிர்ந்துகொண்டு நடக்கின்றனர். இயேசுவோ மறைநூலை அவர்களுக்கு விளக்குகின்றார், அப்பத்தை பிட்டுக்கொடுக்கின்றார். அவர்களது கண்கள் திறக்கப்பட, அவர்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டுகொள்கின்றனர்.
உடனே அவர்களின் கவலை, கலக்கம், குழப்பம் … அனைத்தும் மறைகின்றன. அந்நேரமே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து, தங்களது அனுபவத்தை அனைத்துச் சீடர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றனர்.
உயிர்;த்த இயேசு நம் கவலைகளைக் களைந்து, நம் பாதையைத் திருப்பி விடுகிறார். எதைக் கண்;டு அஞ்சி அகன்று சென்றோமோ (எருசலேம்), அதை நோக்கியே திரும்பிச் செல்ல ஆற்றலும், துணிவும் தருகின்றார். நாம் செய்யவேண்டியதெல்லாம், இறைவார்த்தையிலும், நற்கருணையிலும் உயிர்த்த இயேசுவைச் சந்திக்க வேண்டியதுதான்.
மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் கவலையையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆற்றலை, துணிவை உமது தூய ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி குமார்ராஜா