இயேசுவின் உண்மையான சீடர் யார்?
இந்த நற்செய்திப்பகுதியில் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு பெரிதாகத்தோன்றவில்லை என்றாலும், இயேசு வாழ்ந்த பிண்ணனியில், இது உண்மையிலே எதிர்ப்புகளைத் தேடித்தருகிற வார்த்தைகள். இயேசு வாக்குவாதம் செய்தது சாதாரண மனிதர்கள் அல்ல. சட்டத்தை நன்கு கற்று, அந்த சட்டத்தை உடும்புப்பிடியாகப்பிடித்துக் கொண்டிருந்த சட்ட வல்லுநர்களிடம். எதனைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களோ, எது தங்களது வாழ்வின் நிறைவு என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடத்தில் சட்டங்களைப்பற்றி, விளக்கத்தை எடுத்துச்சொல்வது எளிதானது அல்ல. அதை இயேசு செய்கிறார்.
இயேசு வாழ்ந்த காலச்சூழ்நிலையில் இந்த சட்டங்கள் எவ்வளவுக்கு மக்கள் வாழ்வில் தாக்கம் கொண்டிருந்தது என்பதற்கு பல விளக்கங்களைச் சொல்லலாம். சிரிய அரசன் அந்தியோக்கு எப்பிபான் யூதர்களின் நம்பிக்கையை வேரறுக்க முடிவு செய்து, அவர்களை பன்றி இறைச்சியைச் சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்தினான். பன்றி இறைச்சி தீட்டான உணவு. ”தாங்கள் பன்றி இறைச்சியை சாப்பிட்டு தீட்டாவதைவிட, இறப்பது மேல் என்று சொல்ல, பல யூதர்கள் உயிர்விட்டனர். 1மக்கபேயர் முதலாவது அதிகாரத்தில் இந்த நிகழ்வை நாம் பார்க்கலாம். இப்படி சட்டங்களுக்காக, மரபுகளுக்காக தங்கள் உயிரையே விடத்தயாராக இருந்த காலத்தில் தான், இயேசுவின் இந்தப்போதனை இருந்தது.
உண்மை எப்போதும் உரைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இயேசு தரும் செய்தி. இந்த உலகமே எதிர்த்தாலும், உண்மையை உறுதியாக ஒளிவு மறைவின்றி சொல்கிறவரே, உண்மையான இயேசுவின் சீடர். நாமும் இயேசுவின் உண்மைச்சீடர்களாவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்