இயேசுவின் இரக்கம்
இயேசு தனது போதனையில் நோயாளிகளுக்காக, பாவிகளுக்காக தான் வந்திருப்பதாக அடிக்கடி கூறுகிறார். இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை அவரிடம் கொண்டு வருகிறார்கள். வந்திருக்கிற அனைவர் முகத்திலும் ஒருவிதமான அருவருப்பு காணப்படுகிறது. அந்த அருவருப்பின் பின்புலத்தில் ஒருவிதமான பெருமிதமும் காணப்படுகிறது. சட்டத்திற்கு எதிராகச் சென்ற பெண்ணை கையும், களவுமாக பிடித்துவிட்ட கர்வம், அவர்களது கண்களில் தெரிகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சி மூலமாக இயேசு நமக்கு அருமையான செய்தியை தருகிறார்.
எடுத்த எடுப்பிலேயே, தவறு செய்தவர்களை நாம் பார்க்கிறபோது, வெறுப்புணர்வோடு, கோப உணர்வோடு நாம் பார்க்கிறோம். ஆனால், அவர்களை முதலில் பரிதாப உணர்வோடு பார்ப்பதற்கு இயேசு அழைப்புவிடுக்கிறார். ஒரு மருத்துவர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிடம் மருத்துவத்திற்காக வருகிறபோது, கோபப்படுவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம், நோயை தீர்ப்பதிலும், முடிந்தவரை நோயாளிக்கு ஆறுதலாக இருப்பதிலும் இருக்கிறது. அதேபோலத்தான், தவறு செய்தவர்களையும் நாம் அணுக வேண்டும். தவறு செய்கிற சூழ்நிலை, பிண்ணனி, அணுகுமுறை, தவறு செய்தவரின் மனநிலை இவையனைத்துமே அவர் செய்த தவறுக்கு காரணமாக இருக்கலாம். நம்முடைய வெறுப்பும், கோபமும் இன்னும் அவர் மோசமான நிலைக்கு செல்வதற்கு கூட காரணமாக இருக்கலாம். ஆனால், நமது இரக்கம் நிச்சயம் அவர்களுக்கு ஆறுதலாகவும், தாங்கள் செய்த செயலை நினைத்து வெட்கம் கொள்வதாகவும் இருக்கலாம். அத்தகைய மனநிலையில் தான், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணும் இருக்கிறார். இயேசுவின் இரக்கத்தைப்பெற்று, திருந்தியவராகச் செல்கிறார்.
தவறு செய்தவர்கள் மட்டிலே நாம் பலவிதமான உணர்வுகளோடு குறிப்பாக எதிர்மறையாக அணுகக்கூடிய மனநிலை நிச்சயம் நம்மிடம் இருக்கலாம். இருந்தாலும், நாம் கொடுக்கும் வாய்ப்பு அவர் திருந்துவதற்கும் காரணமாக இருக்கும் என்றால், நிச்சயம் நமது அன்பையும், இரக்கத்தையும் அவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்