இயேசுவின் அழைப்பு
இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை, நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அது இயேசுவின் வாழ்வில் மிக, மிக முக்கியமான நிகழ்வு என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். கடவுளின் விருப்பம் என்ன? என்பதை தெரிந்த கொள்ள, இயேசு மலைக்குச் செல்கிறார். தன்னுடைய மூன்று முக்கியமான சீடர்களோடு செல்கிறார். ஒருவேளை, அவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும், என்பதற்காகக்கூட அவர்களை அழைத்துச் சென்றிருக்கலாம். மோசேவும், எலியாவும் அவருக்குத் தோன்றுகிறார்கள்.
இந்த உருமாற்ற நிகழ்வில், இயேசுவின் முகம் மின்னலைப்போல, வெண்மையாக மாற்றம் பெறுவது நமக்கு முக்கியமான செய்தியைத் தருகிறது. தூய்மையான உள்ளத்தோடு கடவுளைத் தேடி வருகிறபோது, நாம் கடவுளால் இன்னும் அதிகமாக தூய்மையாக்கப்படுகிறோம். இயேசு உடலிலும், உள்ளத்திலும் தூய்மையானவராக வாழ்ந்து வந்தார். மக்கள் மத்தியில் தூய்மையான எண்ணத்தோடு பணிசெய்து வந்தார். அவருடைய உள்ளத்தில் பரிவும், இரக்கமும் மிகுந்திருந்தது. அவரிடத்தில் இருந்த தூய்மையான எண்ணமும், உள்ளமும் தான், மக்கள் மத்தியில், மக்களுக்காக இருபத்துநான்கு மணி நேரமும் பணிசெய்வதற்கு உறுதுணையாக இருந்தது. அந்த தூய்மையான எண்ணத்தோடு அவர் கடவுளை நாடிவருகிறார். அவரது முகம் பளிச்சிடுகிறது.
நாம் கடவுளை தூய்மையான எண்ணத்தோடு, உள்ளத்தோடு தேடுவதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு இருந்த சீடர்களுக்கு அது மிகப்பெரிய பாடம். கடவுளோடு இருப்பது என்றால் என்ன? என்பதை, அவர்கள் அறிந்திருப்பார்கள். தாங்களும் தூய்மையானவர்களாக வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பார்கள். நம்மையும் அதற்காக அழைப்புவிடுக்கிறார்கள்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்