இயேசுவின் அருகாமை
இயேசுவின் காலடிகளைத்துடைத்த அந்த பெண், யூத சமுதாயத்தினால் பாவி என்று முத்திரை குத்தப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண். அந்த சமுதாயத்தினால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்ட பெண். அவளைப் பெண்ணாக, மனிதராகப் பார்ப்பதைவிட, அந்த சமுதாயம் வெறும் பொருளாகத்தான் இதுநாள் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அவளை ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது. ஆனால், இன்றைய நற்செய்தியில் அவளது செய்கை, நடவடிக்கைகள் மற்றவர்களால் பேசப்படுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
அந்த பெண் தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைத்ததாக நாம் வாசிக்கிறோம். பொதுவாக யூதப்பெண்கள் மற்றவர்கள் முன்னிலையில், பொது இடத்தில் தங்களின் கூந்தலை அவிழ்ப்பது இல்லை. திருமணநாளில் முடிந்துவைக்கப்படுகிற கூந்தலை, ஒருபோதும் அவர்கள் வெளியிடத்தில் அவிழ்ப்பது கிடையாது. ஆனால், நற்செய்தியில் வருகிற பெண், தனது கூந்தலை அவிழ்த்து, இயேசுவின் பாதத்தைத் துடைக்கிறாள். அவளுக்கும் யூதப்பாரம்பரியம் தெரியும். ஆனால், இயேசு அருகில் இருக்கிறபோது, அவரிடத்திலே அவள் ஆறுதல் பெற்றபொழுது, எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு இயேசு மட்டும் தான் துணை என்ற நினைவோடு இருக்கிறாள். எனவே, அவள் தான் செய்வது என்னதென்றே தெரியாமல், செய்துகொண்டிருக்கிறாள்.
இயேசு அருகில் இருக்கிறார் என்கிற உணர்வு, அந்த பெண்ணுக்கு ஆறுதலைத்தந்தது. தன்னையே மறக்கச் செய்தது. தனது கவலைகளை மறந்து, பாதுகாப்பு உணர்வை அவளுக்குத் தந்தது. அத்தகைய உணர்வை நாமும் பெற, இயேசுவோடு நாம் இருக்க வேண்டும். அவரது அருகாமையை நாம் உணர வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்