இயேசுவின் அன்புக்கட்டளை
1யோவான் 2: 3 – 11
இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று பலர் முயற்சி எடுக்கின்றனர். இறைவனை எப்படி அறிந்து கொள்ள முடியும்? இறைவனை எங்கே பார்க்க முடியும்? இறைவனை எப்படி தேட முடியும்? இறைவனை அறிந்து கொள்வதற்கு இன்றைய முதல் வாசகம் ஓர் எளிதான வழியை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அது என்ன? ”இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்”. ஆக, இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கிறபோது, இறைவனை நாம் அறிந்து கொள்கிறோம்.
இயேசுவின் கட்டளை என்ன? இயேசுவின் ஒட்டுமொத்த போதனையும், ஒரே வார்த்தையை மையப்படுத்தியதாகத்தான் அமைந்திருந்தது. அது தான் அன்பு. இயேசு தான் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய சீடர்களோடு இருக்கிறபோது, இந்த அன்புக்கட்டளையைத்தான் அதிகமாக வலியுறுத்திக் கூறுகிறார். ஆக, இந்த அன்புக்கட்டளைக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறபோது, நாம் இயேசுவை அறிந்து கொள்கிறோம். இயேசுவை அனுபவிக்கிறோம். நம்முடைய பார்வை மாறுகிறது. நம்முடைய இயல்பு இயேசுவின் இயல்பாக மாற்றம் பெறுகிறது.
நம்முடைய வாழ்வில், இயேசுவை அறிந்து கொள்ள நாம் என்னென்ன முயற்சி எடுக்கிறோம்? அவருடைய அன்புக்கட்டளைக்கு ஏற்ப வாழ்கிறோமா? அவருடைய அன்புக்கட்டளையை வாழ்வாக்க என்ன வழிகளில் முயற்சி செய்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம். இறைவனின் அன்பில் தொடர்ந்து வாழ உறுதி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்