இயேசுதரும் முழுமையான விடுதலை
இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடும் நமக்கு மிகப்பெரிய கருத்தியலையும், ஆழமான சிந்தனையையும் தருகிறது. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் அதுவே, மிகச்சிறந்த வாழ்க்கை நெறிகளை நமக்குத் தருகிறது. இன்றைய நற்செய்தியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆல்ஃப்ரட் எடேர்ஷிம் என்கிற விவிலிய அறிஞர் இந்த பகுதிக்கு அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் மூன்றுமுறை உணவைக் கொடுத்ததாக நற்செய்தியில் சொல்லப்படுகிறது. அந்த மூன்றுமுறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
முதலில் கலிலேயாவில் தனது நற்செய்திப்பணி முடிந்தவுடன் கடைசியாக 5000 பேருக்கு, அப்பம் பலுகக்கொடுக்கிறார். அதன்பிறகு அவர் வேறு எந்த நற்செய்திப்பணியும் செய்யவில்லை. உணவைக்கொடுத்தது தான் கடைசிப்பணி. இரண்டாவது முறை, புறவினத்து மக்கள் மத்தியில் பணி முடிந்ததும் 4000 பேருக்கு அப்பத்தைப் பலுகச்செய்து கொடுக்கிறார். இதற்கு பிறகு அந்த பகுதியில் அவர் வேறொன்றும் செய்யவில்லை. மூன்றாம் முறை தன்னுடைய சீடர்களோடு இறுதி உணவு அருந்துகிறார். அதற்கு பிறகு சிலுவையில் மரிக்கிறார். உணவு என்பது நிறைவைக் குறிப்பதாக இருக்கிறது. தனது பணிவாழ்வின் நிறைவில் இயேசு மக்களுக்கு உணவு கொடுக்கிறார். அதாவது, முழுமை தான் இயேசுவின் பணி என்பதை இது குறிக்கிறது.
ஏழை, எளியவர்களின் ஒட்டுமொத்த துயரைத் துடைப்பது, இயேசுவின் பணியாக இருக்கிறது. முழுமை தான் பணிவாழ்வின் நிறைவு. உடல் நோய்களைக் குணப்படுத்துகிறார். பசிக்கிறவர்களுக்கு உணவும் கொடுக்கிறார். இன்றைய திருச்சபையின் ஒட்டுமொத்த பார்வை, இத்தகைய நிறைவை நோக்கியதாகத்தான் இருக்கிறது. அதுதான் நமது இலக்காகவும் இருக்க வேண்டும்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்