இயேசுதரும் அமைதி
ஒவ்வொரு புதுமையும், முன்னொரு காலத்தில் இருந்த புதுமையாக மட்டும் இருந்தால், அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அது நடந்து முடிந்து விட்டது. இயேசு வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். அவ்வளவுதான் என்று யோசிக்கத்தோன்றும். இயேசு வாழ்ந்தபோது மட்டும் தான், கடலை அடக்குவாரா? அப்படியென்றால், சீறி எழுகின்ற அலைகளுக்கும், கடற்காற்றும் இப்போதும் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களை அவர் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியும் நமக்குக் கேட்கத்தோன்றும். இயேசுவின் வல்ல செயல்களும், புதுமை செய்யும் ஆற்றலையும் மட்டும் இந்த பகுதி நமக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்படவில்லை. அதையும் தாண்டி நாம் சிந்திப்பதற்கு, இது நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இயேசு இருக்கிற இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. மாறாக, அமைதி மட்டும் தான் இருக்கும், என்கிற செய்தியை, இந்த வாசகம் நமக்குத்தருகிறது. வாழ்வின் எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், இயேசு நம்மோடு இருந்தால் போதும். நமது வாழ்க்கை அமைதியாகப் பயணிக்கும். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் நாம் அமைதியாகப் பயணிக்கலாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்தப்பிரச்சனையும் ஒரு பொருட்டாகத் தெரியாது.
நமது வாழ்வில் இயேசு இருக்கிறாரா? என்று கேட்டுப்பார்ப்போம். நாம் இயேசுவுக்கு இடம் கொடுக்கிறோமா? இயேசுவுக்காக நேரம் ஒதுக்குகிறோமா? இல்லையென்றால், நான் வேலைக்கு மத்தியில் சிக்கிக்கொண்டேன். எனவே, கடவுளுக்கு நேரம் ஒதுக்க என்னிடம் போதுமான நேரம் இல்லை, என்று ஒதுங்கிச்செல்கிறோமா? சிந்திப்போம், அதன்படி செயல்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்