இன, மொழித் தடைகள் தகர்க !
மார்டின் லூத்தர் கிங் அவர்களின் “எனக்கொரு கனவு உண்டு. ஒருநாள் வெள்ளை நிறக் குழந்தைகளும், கறுப்பினக் குழந்தைகளும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடப்பர்” என்னும் பிரபலமான கனவை இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனின் மாபெரும் கனவொன்று வெளிப்படுகிறது. “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” என்று உரைக்கிறார் ஆண்டவர். இதுதான் இறைவனின் கனவு. மண்ணுலகில் வாழும் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். எந்தவிதமான பிளவுகளோ, தடைகளோ இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இறைவனின் இந்தக் கனவு நிறைவேறுவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்;னும் கேள்விக்கான விடையை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம். அனைவருக்கும் மீட்பு உண்டு. ஆனால், அனைவருக்கும் அந்த மீட்பின் செய்தியை அறிவிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எப்படி அந்த செய்தியை அறிவிப்பது? நமது வாழ்வால்தான்! நம்மிடையே எந்தப் பிளவுகளும் இன்றி கிறித்தவர்களாகிய நாம் வாழும்போது, பிறருக்கு இறைவனின் கனவை நாம் அறிவிக்கிறோம். குறிப்பாக, சாதியின் பெயரால் கிறித்தவர்கள் பிளவுபட்டு நிற்பது இறைவனின் கனவை முறியடிக்கும் செயல். ஒற்றுமையுடன் வாழ்வோம், இறைவனின் கனவை நனவாக்குவோம்.
மன்றாடுவோம்: ஒற்றுமையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஒரே ஆயனும், ஒரே மந்தையுமாக நாங்கள் அனைவரும் வாழும் வரம் தாரும். எங்களிடையே சாதி, மதம், மொழி, நாட்டின் பெயரால் அமைந்துள்ள வேலிகளை, தடைகளைத தகர்த்தெறிந்து, அனைவரும் உமது பிள்ளைகள் என்னும் உம் கனவை நனவாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்த எங்களை ஆசிர்வதித்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா