இன்றைய சிந்தனை : ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். எரேமியா 17:7
இன்றைய சிந்தனை:
ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும்,வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவார்.பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்கள்;பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும்
யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பார்.
ஆனால், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்:ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவார்கள்.அது நீரோடையை நோக்கி வேர்விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை.அதன் இலைகள் பசுமையாய் இருக்கும் வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.
ஒருநாள் ஒரு சிறு பையன் ஆலயத்தில் போதகர் சொன்ன வசனத்தைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.அன்று அவர் மத்தேயு 17:27 ல் உள்ள வசனத்தை விளக்கிக் கொண்டு இருந்தார்.அதைக்கேட்ட அவனுக்குள் ஆண்டவர் பேரில் நம்பிக்கை அதிகமாகியது.இயேசு பேதுருவிடம் நீ கடலுக்கு போய் தூண்டில் போட்டு முதலில் அகப்படும் மீனின் வாயை திறந்துப்பார். அதில் என் சார்பாகவும்,உன் சார்பாகவும், செலுத்த வேண்டிய நாணயத்தை காண்பாய்.அதை கொடுத்து நீ வரியை செலுத்துவிடு என்று சொல்கிறார். இதை போதகர் சொன்னதைக் கேட்டு அந்த சிறு பையன் நமது வீட்டில் உள்ள வறுமையை போக்க நானும் ஒரு மீனை வாங்கி அதன் வாயைப் பிளந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து என் வீட்டுக்கு கொடுப்பேன் என்று மனதில் தீர்மானம் செய்து அன்றிலிருந்து மீன் வாங்குவதற்காக பைசா சேர்க்க ஆரப்பித்தான்.
ஒரு பெரிய மீன் வாங்க வேண்டிய அளவுக்கு பைசா சேர்ந்ததும் அதை எடுத்துக்கொண்டு சந்தைக்கு சென்று ஒரு பெரிய மீனை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து அம்மா, நீங்கள் இந்த மீனின் வாயை திறந்துப் பாருங்கள். அதில் ஆண்டவர் நமது கஷ்டத்தை நீக்க கூடிய அளவுக்கு பணம் வைத்திருப்பார். அதைக்கொண்டு நாம் இனி கவலை இல்லாமல் வாழலாம், என்று சொல்கிறான்.அம்மா தனது மகனின் நம்பிக்கையை குறித்து ஆச்சரியப்பட்டு, மீனின் வாயை திறந்துப் பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. பயனுக்கு ஒரே ஏமாற்றம். அவன் அழுதுக்கொண்டு இருக்கும்பொழுது அந்த தாய் மீன் வாங்கியபொழுது கடைக்காரர் ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்திருந்தார். அதில் ஒரு விலாசம் இருந்தது.
அந்த விலாசத்தில் அவர்களது பெயரைப்போட்டு பல ஆண்டுகளுக்கு முன் தாங்கள் இழந்த சொத்தை வந்து வாங்கிக் கொள்ளும்படி இருந்தது. அந்த தாயார் உடனே மகனை கட்டி அனைத்து உன் நம்பிக்கை வீண் போகவில்லை. இதோ நாம் ஒரு காலத்தில் இழந்த சொத்து இப்பொழுது நமக்கு கிடைக்கப்போகிறது என்று சொல்லி சந்தோஷம் அடைந்தார்கள். இனி நம்முடைய கவலை யாவும் தீர்ந்து விடும். நீயும் நன்றாக படிக்க போதுமான பணத்தை ஆண்டவர் நமக்கு கொடுத்துவிட்டார், என்று சொன்னார்கள்.
விண்ணையும்,மண்ணையும்,உருவாக்கிய ஆண்டவரின் பேரில் நம்பிக்கை வைப்போர் யாராயிருந்தாலும் வெட்கப்பட்டு போகவிடவே மாட்டார். நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.நம்பினோர் வாழ்ந்து என்றன்றும் சுகமுடன் இருப்பார்கள்.
அன்பின் இறைவா!!
மகா இரக்கமும்,பேரன்பும் கொண்டவரே! உம்மை போற்றி புகழ்கிறோம். எங்கள் தேவைகள் யாவையும் அறிந்து வைத்திருகிறீர். உமக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை.அந்த சிறு பையனின் நம்பிக்கை நிறைவேறியது போல் உம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் உதவி அளிக்க வேண்டுமாய் கெஞ்சி மன்றாடுகிறோம்.நாங்கள் எங்கள் நம்பிக்கையில் ஒருபோதும் சோர்ந்து போகாத படிக்கு காத்தருளும். நீர் ஒருவரே நீதி உள்ளவர்;என்றும் வாழும் ஆண்டவர் நீரே!உமது மகிமையும்,மாட்சியும், என்றென்றும் விளங்கச் செய்யும். உமக்கே நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் நல்ல பிதாவே!
ஆமென்! அல்லேலூயா!!