இன்றைக்கு இயேசுவைப் போற்றினீர்களா?
லூக்கா 17:11-19
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்புமிக்கவர்களே! காலையில் முதலில் கண்விழிக்கும் போது நாம் கடவுள் திருமுன்னிலையில் கண்விழிக்க வேண்டும். அப்படி செய்வது அந்த நாளை சக்திமிக்கதாக மாற்றுகிறது. எழுந்ததும் கடவுளே உமக்கு நன்றி என்று சொல்வது மிகச் சிறந்தது. அதன்பிறகு தொடா்ந்து நம் செயல்களில் அவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு செயல்பாடுகளை செய்து அவரைப் போற்ற வேண்டும். அந்த இரண்டு செயல்பாடுகளை இன்றிலிருந்து செய்வது மிகவும் நல்லது.
1. திருப்பாடல்கள் இசைத்து
காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் நாம் திருப்பாடல்களை இசைத்து ஆண்டவரைப் போற்ற வேண்டும். திருப்பாடலின் ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து உணர்ந்து உயிருள்ள ஆண்டவரை வாயார வாழ்த்த வேண்டும். வாசித்த பிறகு அந்த நாள் முழுவதும் நடக்கும் செயல்களில் ஆண்டவரின் காக்கும் கரத்தை கண்டறிந்து களிப்போடு நன்றி சொல்ல வேண்டும்.
2. திருமந்திரம் இசைத்து
இயேசு என்ற பெயர் வல்லமைமிக்கது, ஆற்றல்மிக்கது. உயிரளிப்பது. இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லி சொல்லி இயேசுவைப் போற்ற வேண்டும். இயேசுவே உமக்கு புகழ், இயேசுவே உமக்கு நன்றி என்று அடிக்கடி சொல்ல வேண்டும். குருக்களை, அருட்சகோதரிகளை, நம் குடும்பத்திலுள்ளவர்களை மற்றும் நமக்குத் தெரிந்தவா்களை சந்திக்கும்போது இயேசுவே உமக்கு புகழ் என இயேசுவை புகழ வேண்டும். திருமந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. தினமும் இயேசுவை நான் போற்றுகிறேனா? போற்றலாம் அல்லவா?
2. திருப்பாடல் இசைப்பது, திருமந்திரம் இசைப்பது இந்த இரண்டையும் இன்றிலிருந்து ஆரம்பிக்கலாமா?
மனதில் பதிக்க…
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழந்துக்கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார் (லூக் 17:15)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா