இனி எப்போதும் மகிழ்ச்சி தான்…
லூக்கா 3:10-18
இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடம் பரப்ப வேண்டும், மகிழ்ச்சியின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வந்திருக்கிறது.
ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க விரும்பி, ஊரில் சிலரிடம் ஆலோசனை கேட்டார். பணம் இருந்தால் போதுமென்றார்கள் சிலர். எனவே அவர் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் நிறையச் செல்வம் சேர்த்து, பெரிய ஆளானார். ஆனால் அவர் தேடிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் சிலரிடம் ஆலோசனை கேட்டார் அவர். செல்வத்தைச் சேர்த்தால் மட்டும் இன்பம் வந்துவிடாது, அதைச் செலவு செய்து இன்பம் காண வேண்டும் என்றனர். ஆதலால் முதலில் அந்த மனிதர் பணத்தை எடுத்துக்கொண்டு விருப்பமான நாடுகளுக்குச் சென்றார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். விரும்பியதை வாங்கிச் சாப்பிட்டார். மது, போதைப் பழக்கத்தில் இறங்கினார். இவை எதுவுமே அவர் தேடலுக்குப் பதில் சொல்லவில்லை. பிறகு, வேறு சிலர் திருமணம் செய்து கொள் என்றனர். கடைசியாக திருமணமும் செய்து குடும்பம் நடத்தினார். அந்த வாழ்க்கையிலும் திருப்தி அடையாமல், இன்னும் சிலர் சொன்னதை நம்பி, துறவறத்தில் ஆவல் கொண்டார் அவர். வீட்டிலிருந்த தங்க வைர நகைகள், பணம்.. இவை எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஒரு யோகியைத் தேடிச் சென்றார். யோகியின் காலடிகளில் தான் கொண்டு சென்ற மூட்டையை வைத்தார். சுவாமி, எனக்கு இதெல்லாம் இனித் தேவையில்லை, மகிழ்ச்சி மட்டுமே தேவை என்றார். அந்த ஆளை நிமிர்ந்து பார்த்த யோகி, அவசர அவசரமாக அந்த மூட்டையைத் தூக்கிக்கொண்டு வேக வேகமாக ஓடினார். அய்யோ ஏமாந்துபோய்விட்டோமே என கலங்கி, அந்த மனிதரும் யோகி பின்னாலேயே ஓடினார். ஓரிடத்தில் இருவரும் மூச்சிரைக்க நின்றனர். அப்போது யோகி சொன்னார், என்ன பயந்துட்டியா, இந்தா உன்னோட செல்வம். நீயே வச்சுக்க என, மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார். தனது செல்வம் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தார் அந்த மனிதர். அப்போது யோகி சொன்னார், நீ இங்கே வர்றதுக்கு முன்னாடிகூட இந்தத் தங்கமும் வைரமும் பணமும் உன்கிட்டேதான் இருந்தன. அப்போ உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்ப உன்கிட்டே இருக்கிறது அதே தங்கமும் வைரமும் பணமும்தான். ஆனா இப்ப உன் மனசுலே மகிழ்ச்சி இருக்கு… இதிலேருந்து என்ன தெரியுது…
மகிழ்ச்சியை பணத்தால் பெற முடியாது என்பதையும், உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதையும், அந்த யோகி, அந்த மனிதருக்கு சிறு செயல் வழியாக அழகாக விளக்கிவிட்டார்.
மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். கண்டதையும் போட்டு மனதை உளட்டிக் கொண்டிருக்காமல் இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலர் தங்கள் குடும்பத்துடன் இருந்தாலே மகிழ்ச்சியை உணருவார்கள். சிலருக்கு புத்தகங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். இன்னும் சிலருக்கு, பை நிறைய சாக்லேட் கிடைத்தால் கண்கள் விரிய சந்தோஷமடைவார்கள். சந்தோஷமாக இருப்பவர்கள் பொதுவாகவே யாருக்கும் தீமை நினைக்க மாட்டார்கள்.
மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதுதான் நம் அனைவரின் கேள்வி. அந்த மகிழ்ச்சியை இந்த திருவருகைக்காலம் வழங்குகிறது. நம்மை மகிழ்ச்சியின் மனிதா்களாக மாற்றுகிறது. மூன்று சிந்தனைகளை நம் முன் நிறுத்துகிறது.
1. நம் வேலையை மட்டும் பார்த்தால்… மகிழ்ச்சி நிச்சயம்
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார். அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன். என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்கு வந்தவள். மிகவும் அதிர்ச்சியடைந்தாள்.
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய..
அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா. என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று கணவன் திகைத்துப்போனான்.
நம் வேலையை நாம் பார்த்தாலே போதும் நம் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறையே இருக்காது. அடுத்தவர் வேலையில் நாம் நுழையும்போது நம் மகிழ்ச்சி பறிபோகிறது. நாம் வாழ முடியாமல் போகிறது. நமக்குள் குறை வந்து குடிகொள்கிறது.
2. நடந்தது நல்லதற்கே என்றிருந்தால்… மகிழ்ச்சி நிச்சயம்
நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம். மணி பத்தைத் தாண்டியிருந்தது. டிசம்பர் மாதம் தொடங்கியிருந்தது. கடந்த வருடம் வரை அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார். நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்…
* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை அகற்றிவிட்டார்கள்.
* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை, என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.
* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங் நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.
* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.
* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான். அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும் தோற்றுப் போனான்.
* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும் மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.
இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்… `கடவுளே… இது மிக மோசமான வருடம்.’
எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன் அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார். வெளியேறினார்.
அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள் நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது…
* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்துகொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.
* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி, எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு இப்போது அதிக நேரமிருக்கிறது.
* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும் சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப் பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.
* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு வாழ்க்கையைக் கொடுத்தார்.
* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப் பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே… அது போதும்.
இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது. `ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம் நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் நம்மை மகிழ்ச்சியின் மனிதர்களாக மாற்றும். கடந்த காலம் கடந்தது. அதை எண்ணி எந்த பயனும் இல்லை. ஆகவே நிகழ்காலத்தில் இனி நடப்பதை எண்ணி மகிழ வேண்டும். இந்த எண்ணம் இருந்தால் நம் வாழ்வில் சரிவு இருக்காது. நாம் பல வருடங்கள் இந்த அவனியில் நோய்கள் இல்லாமல் வாழ முடியும்.
தவறான பழக்கத்தை விட்டுவிட்டால்… மகிழ்ச்சி நிச்சயம்
குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்த வனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.
“ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?”
“சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்.”
“ஏன்யா… இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”
கேட்ட அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து வருத்தத்துடன் சொன்னார்.
“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”
சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தனிந்த குரலில் கேட்டார்.
“அப்படி என்ன கட்டாயம்.?”
கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னார்.
“பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு… சார்.!”
நெகட்டிவாக உள்ள எந்தவிதமான கெட்ட விஷயங்களையும், எண்ணங்களையும் பழகக் கூடாது. அவை நம் வாழ்க்கையில் அறவே குறுக்கிடக் கூடாது. ஒருவேளை குறுக்கிட்டால், உங்களுக்குப் பிடித்தவற்றை நினைத்தோ அல்லது பார்த்தோ ஒரு புன்னகை மட்டும் செய்யுங்கள்; அவை ஓடிப் போகும். மேலும், கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது.
வாழ்க்கை அழகானது. அதில் நாம் கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வினாடியும், ஒருபோதும் திரும்ப வரவே வராது. எனவே, வாழ்வில் பிறர்க்குப் பயன்பட வாழ்வோம். தானும் மகிழ்வாய் வாழ்ந்து, பிறரையும் அதே மகிழ்வில் வாழ வைப்போம்.
மனதில் கேட்க…
1. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் தயாரா?
2. நான் இருக்குமிடத்திற்கும், சந்திக்கும் நபர்களுக்கும் மகிழ்ச்சியை மனதார வழங்கலாமா?
மனதில் பதிக்க…
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1தெச 5:16-18)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா