இனி எப்போதும் சந்தோசமே!
லூக்கா 19:1-10
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
“சந்தோசம் சாத்தியம்” என்ற அறிவிப்போடு அழகாய் வருகிறது இன்றைய நாள் வாசகம். எந்த பொருளும், எந்த நபரும் தர முடியாத நிலையான, நிரந்தரமான சந்தோசத்தை சக்கேயு என்பவர் இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரமாக விவரிக்கிறது. நம்மையும் அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள கனிவோடு அழைக்கின்றது. கொஞ்ச நேர சந்தோசத்தை நாம் வைத்திருக்கும் பொருள், நம்மோடிருக்கும் நபர் தர முடியும். பின் அந்த சந்தோசம் கானல் நீராய் மறைந்து போகும். ஆனால் மறையாத, மங்காத, நிலையான சந்தோசத்தை நம் ஆண்டவர் இயேசு மட்டுமே தர முடியும். அதை சக்கேயு அடைய அவர் எடுத்த இரண்டு முயற்சிகள் மிகவும் இன்றியமையாதது. நாமும் செய்வோமா! நிலையான சந்தோசத்தை நமக்கு சாத்தியமாக்குவோமா!
1. ஓடினார்
“பாம்பைக் கண்டு ஓடுவது போல பாவத்தைக் கண்டு ஓடு” என்கிறது நீதிமொழிகள். செய்த பாவம் போதும். இனி வேண்டவே வேண்டாம் என இயேசுவை நோக்கி ஓடினார் சக்கேயு. இயேசுவைக் கண்டார். பாரங்களை எல்லாம் இறக்கி வைத்தார். இயேசுவின் பாசமழையில் நனைந்தார். நிலையான சந்தோசம் அவருக்கு கிட்டியது. நாமும் ஓட வேண்டும். இப்போது இருக்கும் பாவநிலைியிருந்து ஓடி இயேசுவிடம் சேர வேண்டும். பாவத்திலிருந்து ஓடி புனிதம் அடைய வேண்டும். நிலையான சந்தோசத்தை சம்பாதிக்க வேண்டும்.
2. இறங்கினார்
ஆண்டவர் இயேசு கிறிஸ்து சக்கேயுவைப் பார்த்து, “உன் கோபம், எரிச்சல், பழிவாங்கும் எண்ணம், பகைமை, கயமை, அகங்காரம், ஆணவம் இவற்றிலிருந்து இறங்கி வா, உன் குருட்டு, இருட்டு வாழ்விலிருந்து இறங்கி வா, விரைவாக இறங்கி வா” என்று அழைத்ததும் மிக வேகமாக இறங்கி வந்தார். இறங்கி வந்ததுதான் அவர் கண்ட சந்தோசத்திற்கான இரகசியம். நாமும் இறங்கி வருவோம். விரைவாக இறங்கி வருவோம். நாளை அல்ல இப்போது. நமக்காக சந்தோசம் காத்துக்கிடக்கிறது.
மனதில் கேட்க…
1. நிலையான சந்தோசத்தை தேடி அதில் வாழ்வை தொடர்ந்து கொணடாடலாம் அல்லவா?
2. பாவத்திலிருந்து ஓடி, தீய குணங்களிலிருந்து இறங்கி இயேசுவின் வழியில் சந்தோசத்தை பிடிக்கலாமா?
மனதில் பதிக்க…
சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் (லூக் 19:5)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா