இனி என்றும் இளமையே!
லூக்கா 4:31-37
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதர்கள் அனைவரும் தாங்கள் வயதாவதை விரும்புவதில்லை. எப்போதும் இளமையுடன் இருக்கத்தான் ஆசைப்படுகின்றனர். என்றும் இளமையோடு இருப்பதற்கு இரண்டு விதமான அருமையான ஆலோசனைகளோடு அகமகிழ்ந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
1. கட்டளையிடும் அதிகாரம்
நாம் இருட்டில் எதையாவது பார்த்து பயப்படும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு சொல்லித் தருவார்கள், “இனி நீ இருட்டில் நடக்கும் போது நாசரேத்து இயேசுவின் பெயரால் கட்டளையிடுகிறேன். தீய சக்தியே அகன்று போ” என கட்டளையிட்டுச் சொல். அப்படி சொன்னதும் தீயவை அனைத்தும் காணாமல் போகும் என சொல்லித் தருவார்கள். அந்த மந்திரத்தை சொல்லிய பிறகு நாமும் எந்த தீய சக்தியையும் நம் கண்ணில் காண்பதில்லை. ஆகவே ஆண்டவர் இயேசு கட்டளையிட்டு தீயவைகளை தீர்த்துகட்டியது போல நாமும் இயேசுவின் பெயரால் தீயவற்றிற்கு கட்டளையிட்டு ஓட ஓட விரட்ட முடியும். அப்போது எப்போதும் இளமை பொலிவு நம்மை விட்டு போகாது.
1. கட்டுப்படுத்தும் அதிகாரம்
எந்த தீய சக்தியும் நம் வாழ்க்கையில் வராமல் நம்மால் கட்டுப்படுத்தும் அதிகாரமும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. புனிதர்கள் கடவுள் கொடுத்த அருளை வைத்து புனிதத்தில் நாள்தோறும் தங்களை வளர்த்தார்கள். நாம் நம்மை உலகின் ஆசைக்கு இட்டுச்செல்லும் போது இன்னல்கள் உருவாகின்றன. மாறாக நாம் நமக்குள் இந்த உலக ஆசைகள் வரும்போது ஒரு கட்டுப்பாடோடு வாழந்தோம் என்றால் இனிமைதான் என்றென்றும். அப்போது எப்போதும் இளமை பொலிவு நம்மை விட்டு போகாது.
மனதில் கேட்க…
1. எப்போதும் இளமையோடு வாழ நான் தீயவற்றிற்கு கட்டளையிட தயாரா?
2. என்றும் இளமை பொலிவோடு வாழ தீயவற்றை எனக்குள்ளே கட்டுப்படுத்த நான் தயாரா?
மனதில் பதிக்க…
தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர் (சாஞா 6:10)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா