இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்
அன்பார்ந்த இணையதள வாசகர் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்.
ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்னவென்றால் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது; நான் உங்களுக்கு கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து வெள்ளாண்மை வைத்து அதை அறுவடை
செய்யும் பொழுது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.உங்கள் சார்பாக ஏற்கத்தக்கதாக குரு அந்த தானியக் கதிர்க்கட்டினை ஆண்டவரின் திருமுன் ஆரத்திபளியாகவும்,மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகவும்,செலுத்துங்கள், என்று லேவியர் 23ம் அதிகாரத்தில் 9லிருந்து 14 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
இந்த 23ம் அதிகாரம் பாஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரப்பெருவிழா, புத்தாண்டுவிழா, பாவக்கழுவாய் நாள் ஆகிய சமயப் பெருவிழாக்கள் பற்றி கூறுகிறது.இந்த விழாக்களுக்கு மக்களைக் கடவுள் அழைத்து அவர்களை திருப்பேரவையாக ஓன்று சேர்க்கிறார்.
பாஸ்கா, என்றால் இஸ்ரவேலர் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என்ற முறையில் ஓர் ஆட்டை பலியாக்கும் பெருவிழாவாகவும், வாற்கோதுமை அறுவடையின் தொடக்கவிழாவாகவும், நம் நாட்டில் இப்பொழுது நாம் கொண்டாடும் பொங்கல் விழாவைப் போன்ற ஓர் உழவர் திருவிழா எனலாம். அதனால் இதை ஜாதி,சமய,வேறுபாடின்றி கொண்டாடும் தமிழர்களின் திருநாள்,[பெருவிழா] என்று கூறலாம். திருச்சபையில் வழிபாட்டுவிழாக் கொண்டாட்டங்கள் யூத மரபைப் பின்பற்றியே வந்தது என்பதில் சிறிதேனும் ஐயமுண்டோ!!!
விழா என்றாலே மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம். அந்த மகிழ்ச்சியை நாம் ஒவ்வொருவரும் பெற்று இன்பம் பெற இருப்பவர் இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம். இதைத்தான் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். நாமும் இந்த பொங்கல் திருநாளில் நல்லதொரு முடிவு எடுத்து பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியதை [திருத்தூதர் பணிகள்
20 – 35 .] இந்நாளில் நினைவு கூர்ந்து பிறர்க்கு மகிழ்வுடன் கொடுத்து அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்.லூக்கா 14 – 12,13,14.
ஜெபம்
======.
அன்பின் இறைவா!!! இந்த நாளுக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம்,போற்றுகிறோம். நீர் கற்றுக்கொடுத்த பாதையில் நாங்களும் கடந்து வர எங்களுக்கு உதவி செய்யும். உம்மைப்போல மாறவும் பிறர்க்கு உதவவும் நல்ல செயல்களை செய்யவும் எங்களுக்கு போதித்து வழி நடத்தும். இந்த திருவிழாவை நீர் விரும்பும் முறையில் கொண்டாட உதவி செய்யும். மாட்சிமை, மகிமை யாவும் உமக்கே. ஆமென்!! அல்லேலூயா!!!
~ Sis. Sara, MyGreatMaster.com