இதோ வருகின்றேன்
திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16
”இதோ வருகின்றேன்”
கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு?
இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப் பார்க்கிறோம். இது இன்னும் இயேசுவின் மதிப்பீடுகளை முழுமையாக மக்களின் உள்ளத்தில் சரியாக விதைக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. “இது சாதாரண மக்களின் விசுவாசம்“ என்ற பெயரில் நம்முடைய தவறுகளை நாம் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். கடவுளிடம் இதோ வருகின்றேன் என்று சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய விருப்பங்களையும், நாம் எண்ணுகிறவற்றையும் விட்டுவிட்டு, கடவுளுக்கு எது பிரியமோ அதை நாம் செய்ய வேண்டும்.
இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றுவது என்பது முடியாத காரியம். ஆனால், நம்மை நாம் மாற்ற முடியும். அந்த மாற்றத்தை நாம் செய்வதற்கு முன்வருவோம். இறைவன் நம்மை முழுமையாக ஆட்கொண்டு, பல நன்மைகளைச் செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோடு இந்த திருப்பாடலை தியானிப்போம்.