இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்
திருப்பாடல் 54: 1 – 2, 4, 6
இந்த திருப்பாடல், 1சாமுவேல் 23: 19, 26: 1 ல், ”சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில், ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான்” என்கிற செய்தியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தாவீதை, சவுல் அரசரிடம் காட்டிக்கொடுக்கக்கூடிய நிகழ்வு இங்கே குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட வேதனையான நேரத்தில் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார். ஆனால், அவரின் வார்த்தைகளிலிருந்து, இந்த துன்பத்திலிருந்து அவர் தப்பிவிட்ட உணர்வு வெளிப்படுகிறது. தன்னுடைய எதிரிகளைப்பற்றி இறைவனிடம் முறையிடுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்த திருப்பாடலில் தாவீது ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய ஆற்றலின் மீதோ, தன்னுடைய நண்பர்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்றோ அவர் நினைக்கவில்லை. ஆண்டவர் மட்டும் தான், தன்னை இக்கட்டிலிருந்து முழுமையாகக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். எனவே, அவரையே முழுமையாக நம்பி அவரிடத்தில் முறையிடுகிறார். கடவுள் தனக்கு துணைவராக இருப்பதாகவும் அவர் நம்புகிறார். தான் எவ்வளவுதான் தவறு செய்திருந்தாலும், ஆண்டவரிடத்தில் வருகிறபோது தன்னை அவர் முழுமையாக காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் அதிகமாக இருக்கிறது.
இறைவனின் உதவியை நாம் எந்த நேரமும் நாடலாம் என்கிற சிந்தனையை இந்த திருப்பாடல் நமக்குத் தருகிறது. இறைவன் நம்முடைய நம்பிக்கைக்குரியவர். நாம் இறைவனின் உதவியை எப்போது கேட்டாலும், அவர் நமக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறார். அந்த இறைவனிடத்தில் நம்மை முழுமையாக ஒப்படைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்