இது என்ன தர்மம்? இதுவரை தெரியலையே
லூக்கா 11:37-41
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
தா்மம் தலை காக்கும் என்பது நாம் வாழ்க்கையில் பிறருக்கு செய்யும் உதவிகள் பிறகு நமக்கு திருப்பி கிடைக்கும் என்பது பொருள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்வது மிகவும் வித்தியாசமாக உள்ளது. உங்கள் உள்ளத்தில் உள்ளதை தர்மமாக கொடுங்கள். உங்கள் உள்ளத்தில் உள்ள அன்பு, அக்கறை, பாசம், இரக்கம், மன்னிப்பு, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகளை தர்மமாக பிறருக்கு கொடுங்கள் என்கிறார்.
இங்கு இயேசு சொல்வது பொருள் அல்ல மாறாக நற்பண்புகள். நாம் தர்மம் கொடுக்க வேண்டுமென்றால் நமக்குள் கண்டிப்பாக அந்த நற்பண்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த நற்பண்புகளை நாம் பெற்றிருக்க இரண்டு செயல்களில் மிக விரைவாக இறங்க வேண்டும்.
1. சுத்தப்படுத்து
நற்பண்புகளை நட வேண்டுமென்றால் முதலில் செய்ய வேண்டிய வேலை களைகளை பிடுங்க வேண்டும், அசுத்தங்களை அப்புறப்படுத்த வேண்டும். முதலில் என்னென்ன குறைகள், கறைகள் நமக்குள் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். கண்டறிந்த பிறகு அதற்காக மனம் வருந்த வேண்டும். மனம் வருந்திய பிறகு குருவிடத்தில் நல்ல ஒப்புரவு செய்ய வேண்டும். ஒப்புரவினால் சுத்தப்படுத்திய பிறகு நற்பண்புகளால் நிரப்ப வேண்டும்.
2. சுதந்திரமாகு
சுத்தப்படுத்திய பிறகு சோதனைகளில் விழாதவாறு சுதந்திரமாக இருக்க வேண்டும். தொல்லைகள் தொடர் நெருக்கடி கொடுக்கும். ஆனால் அவைகளில் மாட்டாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முழுவதும் சுதந்திரமான மனிதர்களாக வலம் வர வேண்டும். படைக்கப்பட்ட பொருட்களுக்கு அடிமையாகாமல் பத்திரமாக இருக்க வேண்டும்.
மனதில் கேட்க…
1. இந்த வகையான தா்மம் எப்போதாவது செய்ததுண்டா? இனி தினமும் செய்து பார்க்கலாமே?
2. சுத்தப்படுத்தி, சுதந்திரமாகி நற்பண்புகளை தர்மமாக கொடுப்பது எவ்வளவு சிறந்தது?
மனதில் பதிக்க…
உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாக கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும் (லூக் 11:41)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா