இணைந்து செல்லும் கட்டளை
மாற் 12:28-34
திருச்சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் யூதர்கள். இவர்களைத் தலைமையின்று சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து வலியுறுத்தியவர்களில் மறைநூல் அறிஞர்களின் பங்கும் மிகப் பெரியது. ஆனால் இயேசுவின் போதனையின் ஆழத்தை உணர்ந்த மறைநூல் அறிஞருள் ஒருவர் அவரை அணுகி சிறந்த கட்டளை ஏது? எனக் கேட்கின்றார். ஒரு கேள்விக்கு இரு பதில்கள் கூறப்பட்டது போலத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இறையன்பு இல்லாமல் பிறரன்பு இல்லை. பிறரன்பு இல்லாமல் இறையன்பு இல்லை. இந்த இரண்டுக் கட்டளையும் ஒன்றை விட்டு மற்றொன்று முழு அர்த்தம் பெற இயலாது.
கடவுளை முழு மனத்தோடு நேசிக்கும் எவரும் கடவுளின் சாயலான (தொ.நூல் 1:27) மனித இனத்தை அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர் வெளிப்படுத்துவது மக்களிடையே தான். எனவேதான் கடவுள் தனது ஒரே மகனை மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்புகிறார். (யோவான் 3:16) அதே யோவான் தனது திருமுகத்தில் கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. (1 யோவான் 4 : 20) மேலும் ஆண்டவர் “மிகச் சிறியோராகிய எனது சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25 : 40) என்று கூறுவதும் இதன் அடிப்படையில்தான்.
இந்த இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் நம் கண்முன் இருக்கின்ற பெரிய அடையாளமும், இறையன்பையும் பிறரன்பையும் ஒற்றைப் புள்ளியில் இணைப்பதும் சிலுவையே. சிலுவையிலிருக்கும் நேர்க்கோடு பிறரன்பிற்கும், அனைவரும் சமம் என்பதற்கும் சான்றாக விளங்குகின்றது. செங்குத்துக்கோடு கவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை இணைக்கின்ற பாலமாக இருக்கின்றது. சிலுவையை உற்று நோக்குவோம். இறையன்பிலும் பிறரன்பிலும் வாழ்க்கையைத் தொடருவோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு